4 வயது பேரனை கொன்று பாட்டி - தாய் தற்கொலை; தாராபுரம் அருகே பரபரப்பு

4 வயது பேரனை கொன்று பாட்டி - தாய் தற்கொலை; தாராபுரம் அருகே பரபரப்பு
X

Tirupur News,Tirupur News Today- தாராபுரம் அருகே மூலனூரில், பேரனை கொன்று பாட்டியும், தாயும் தற்கொலை (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- புது வீடு கட்ட முடியாத ஏக்கத்தில், சம்பாதித்த பணத்தை உறவினர்கள் ஏமாற்றிய விரக்தியில், மூலனூரில் 4 வயது பேரனை கொன்ற பாட்டியும், தாயும் விஷம் குடித்து உயிரிழந்தனர்.

Tirupur News,Tirupur News Today- திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவார பகுதியை சேர்ந்தவர் அம்மாப்பட்டியான்(வயது 62), தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி (55). இவர்களது மகள் நந்தினி (35).

நந்தினிக்கும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காரியாப்பெட்டிவலசு பகுதியை சேர்ந்த ஜோதிபாசு என்பவருக்கும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகன் திலக் கலாம் (4). நந்தினியின் தாய் தமிழரசி, கத்தார் நாட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர், தமிழ்நாட்டுக்கு திரும்பினார்.

இதையடுத்து அவர், தனது மகள் நந்தினியுடன் திருப்பூர் மாவட்டம் மூலனூர் கன்னிவாடி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மருமகன், பேரனுடன் வசித்து வந்தார். நந்தினி கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவர்கள் குடியிருந்த வீட்டை காலி செய்யுமாறு அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இதையடுத்து தமிழரசி, தனது மகள் நந்தினியிடம் சொந்தமாக வீடு ஒன்றை கட்டலாம் எனத் தெரிவித்துள்ளார். தமிழரசி, கத்தாரில் வேலை செய்யும் போது கிடைத்த பணத்தை எல்லாம், ஊரில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அதனை உறவினர்கள் செலவு செய்து விட்டனர். அதனால், அவர்கள் சொந்த வீடு கட்டும் ஆசை தடைபட்டது. இதனால் நந்தினி, தனது தாய் தமிழரசியிடம் , ‘கத்தாரில் வேலை செய்த பணத்தை தான் ஒன்றும் இல்லாமல், ஆக்கிவிட்டாயே,’ என்று கோபப்பட்டுள்ளார். இதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. உறவினர்கள், பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதால் மனமுடைந்த நிலையில் அவர்கள் இரண்டு பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

நந்தினியின் கணவர் ஜோதிபாசு வெளியே சென்றிருந்த நேரத்தில் விஷத்தை வாங்கி வந்து, தண்ணீரில் கலந்து தமிழரசியும், நந்தினியும் குடித்தனர். மேலும் 4 வயது சிறுவன் திலக்கலாமுக்கும் விஷத்தை கொடுத்தனர். அதனை குடித்த சிறிது நேரத்தில் ௩ பேரும் மயக்கமடைந்தனர். திலக்கலாம் அந்த இடத்திலேயே உயிரிழந்தான். தமிழரசியும், நந்தினியும் உயிருக்கு போராடினர். மகன் இறந்ததால் மிகவும் மனமுடைந்த நந்தினி, வீட்டில் தூக்குப்போட்டு உயிரிழந்தார். தமிழரசி உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே நந்தினி தூக்கில் சடலம் தொங்கியதுடன், திலக்கலாம் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த தமிழரசியை, சிகிச்சைக்காக மூலனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நந்தினி, திலக்கலாம் உடல்களை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழரசி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீடு பிரச்சினையில் இந்த தற்கொலை சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 வயது மகனை கொன்று தாய்-பாட்டி தற்கொலை செய்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!