அசுர வளர்ச்சி: அசர வைக்கும் அவினாசி அரசு கலைக்கல்லுாரி!

அசுர வளர்ச்சி: அசர வைக்கும்  அவினாசி அரசு கலைக்கல்லுாரி!
X

கல்லூரியின் மாதிரித் தோற்றம்

குறுகிய கால இடைவெளியில், அசுர வேக வளர்ச்சி பெற்றிருக்கிறது, அவினாசி அரசு கலைக்கல்லுாரி.

திருப்பூர் மாவட்டம், அவினாசி, கைகாட்டிபுதுாரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கடந்த, 4 ஆண்டுக்கு முன், அவினாசி அரசு கலை அறிவியல் கல்லுாரி உருவாக்கப்பட்டது. துவக்கத்தில், அங்கு நிலம் ஒதுக்கப்பட்டு, 8 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்ட, மூன்று அடுக்கு கட்டடம் கட்டப்பட்டது.

கூடுதல் மாணவர் சேர்க்கை

ஆண்டுக்காண்டு, ஒன்றிரண்டு புதிய பாடப்பிரிவுகள், அறிமுகம் செய்யப்பட்டன. தற்போதை சூழலில், பி.ஏ., ஆங்கிலம், பி.ஏ., பொருளாதாரம், பி.காம்., மற்றும் பி.காம்., சர்வதேச வணிகவியல் என, நான்கு பாடப்பிரிவுகளில், தலா, 75 மாணவர்கள் வீதம் கல்வி பயில்கின்றனர். மேலும், ஆய்வக வசதி அடிப்படையில், கம்ப்யூட்டர் அறிவியல் பாடப்பிரிவுக்கு, 50 பேர், பி.எஸ்.சி.. வேதியியல் பாடப்பிரிவில், 24 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவியரே அதிகம்

இந்தாண்டு, முதல் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, கல்வி துவங்கியுள்ள நிலையில், மாணவர் எண்ணிக்கை, 371 ஆக உள்ளது. இதில், மாணவியர் மட்டும், 240 பேர். கடந்த மூன்றாண்டுகளில், இல்லாத வகையில் இந்தாண்டு, மாணவியர் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துள்ளது.


இதற்கான காரணம் குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஏழைக் குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியரே, இங்கு அதிகளவில் படிக்கின்றனர். பெரும்பாலும், பள்ளி படிப்போடு, தங்கள் கல்வியை முடித்துக் கொள்ளும் மாணவியர், பட்டப்படிப்பு படிக்க ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குரியது. அவர்களுக்கு உரிய ஊக்குவிப்பு வழங்கி, கல்வியை தொடர, இயன்றளவு ஊக்குவிப்பு வழங்கி வருகிறோம்,' என்றனர்.

தேவை, வேலை வாய்ப்பு!

தற்போயை சூழலில், மூன்றாண்டு மாணவர் எண்ணிக்கை, 1,000த்தை கடந்துள்ளது. இக்கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியர் பெரும்பாலும், சுற்றியுள்ள பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட ஆயத்த ஆடை சார்ந்த தொழிலில் வேலை வாய்ப்பு பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனா காலகட்டத்தில், அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபோது, பலரும் இத்தகைய வேலையில் தங்களை ஈடுபடுத்தி, தங்கள் குடும்ப பொருளாதாரத்தை தாங்கிப்பிடித்தனர் என்பது தான், யதார்த்தம்.

கோப்பு படம்

தொழில் நகரங்களாக உள்ள திருப்பூர் மற்றும் அருகேயுள்ள ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில், வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கும் சூழலில், தனியார் கல்லுாரிகளில் 'கேம்பஸ் இன்டர்வியூ' நடத்தி, மாணவ, மாணவியரை பணிக்கு தேர்வு செய்வது போன்று, தொழில் துறையினரும், அரசு கல்லுாரி மாணவ, மாணவியருக்கு. அவர்களது தகுதி அடிப்படையில், வேலை வாய்ப்பு வழங்கும் வகையிலான 'கேம்பஸ் இன்டர்வியூ' போன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்.

இதன் மூலம், மாணவ, மாணவியான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்கள் தங்களின் கற்கும் திறனை அதிகரித்து, திறமையை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.

பூர்த்தியாகுமா, ஆசிரியர் பற்றாக்குறை

இக்கல்லுாரியில், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், 4 ஆசிரியர்கள் தேவையுள்ளது. இருப்பினும், ஓரிரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், ஆசிரியர் தேவை, தற்காலிகமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனவே, தேவைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பட்சத்தில், கல்வித்தரம் மேம்படும் என்பதில் மிகையில்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!