விநாயகர் சதுர்த்தி விழா, விசர்ஜன ஊர்வலம்; பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆலோசனை
Tirupur News,Tirupur News Today- விநாயகர் சதுர்த்தி விழா, விசர்ஜன ஊர்வலம் குறித்து ஆலோசனை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சிலை பிரதிஷ்டை செய்தல் மற்றும் விசர்ஜன ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதுகுறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது,
விநாயகர் சிலை அமைப்பவர்கள், அவற்றை பிரதிஷ்டை செய்வதற்கு, மாநகராட்சி பகுதிகளை பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவி ஆணையர்களிடமும், ஊரகப்பகுதிகளில் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோரிடமும் உரிய அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை நிறுவிட வேண்டும்.
சிலைகள், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு நீர் நிலைகளை மாசுபடுத்தாத இயற்கை வர்ணங்கள் மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வர்ணப்பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகள் பயன்படுத்தக்கூடாது.
பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்ககூடாது. விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது. இதர மத வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகளை நிறுவுதல் கூடாது.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்பினரால் நிறுவப்படும் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமித்திட வேண்டும். மாநகராட்சி பகுதியை பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவிஆணையர்களிடமும் ஊரகப் பகுதிகளில் தொடர்புடைய சார் ஆட்சியர்-வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோரிடமும் அதன் விபரங்களை தெரிவிக்கப்பட வேண்டும்.
விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் சிலைகள், காவல் துறையினரால் அனுமதியளிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊர்வலத்தில் பட்டாசு, வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது. ஊர்வலத்தின் போது காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலம் செல்லக்கூடாது. ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டோ அல்லது மற்றவர்களது மனம் புண்படும்படியோ கோஷமிடல் கூடாது. ஊர்வலம் போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு இல்லாத வகையில் நடைபெற வேண்டும்.
மேலும் பிரதான சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில், சாலையின் இடதுபுறமாக செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது எந்த விதமானஅசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்கும், அமைதியாக ஊர்வலம் நடத்தி முடிக்கவும், ஊர்வலத்தை நடத்துகிற பொறுப்பாளர்கள் முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.
மேலும் விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் போதுமான மின் விளக்கு வசதிகள் செய்யப்படல் வேண்டும். ஊர்வலத்தின் போது போக்குவரத்திற்கோ, பொது சொத்திற்கோ சேதம் விளைவித்தால் அமை ப்பாளர்கள் தான் முழு பொறுப்பாளர் ஆவார்கள். நிறுவப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் வருவாய் கோட்டாட்சியர்கள்-காவல் உதவி ஆணையர், காவல் துணை கண்காணிப்பாளர்களால் வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள் விசர்ஜனம் செய்யப்பட வேண்டும். நான்கு சக்கர வாகனங்களான மினி லாரி-டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே சிலைகள் விசர்ஜனத்திற்காக எடுத்துச் செல்லப்பட வேண்டும். மாட்டுவண்டி-3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது. இது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை சம்மந்தப்பட்ட அமைப்புகள் பின்பற்றி நடக்க வேண்டும்.
விநாயகர் சதூர்த்தி திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கை பராமரிக்க அனைத்து அமைப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபிநபு , மாவட்ட காவல் எஸ்.பி சாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிருத்திகா எஸ்.விஜயன், துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu