தீபாவளி பண்டிகை; திருப்பூர் மாவட்டத்தில் 308 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி
Tirupur News,Tirupur News Today- தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க மாநகரம், புறநகரில் பலரும் விண்ணப்பித்து இருந்தனர். அதில் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு 129 பேர், மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் 195 பேர் என மாவட்டத்தில் 324 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்தனர்.
கடைகள் அமைய உள்ள பகுதி பாதுகாப்பானதா, உரிய சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா மற்றும் கள ஆய்வு பணியை கடந்த ஒரு வாரமாக போலீசார் மேற்கொண்டு வந்தனர். அதன்பின் மாநகரில் 129 கடைகளுக்கு போலீஸ் கமிஷனர் அனுமதி அளித்துள்ளார். புறநகரில் பல்வேறு காரணங்களுக்காக 16 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 179 கடைகளுக்கு அனுமதி வழங்கி கலெக்டருக்கு எஸ்.பி., பரிந்துரை செய்துள்ளார். இவ்வாறு மாவட்டம் முழுவதும் 308 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஒரு வாரத்துக்கு பட்டாசு கடை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் தீபாவளி பட்டாசு விற்பனை சூடுபிடிக்கவில்லை. ஆங்காங்கு சில கடைகளில் மட்டுமே பட்டாசுகள் வாங்கப்படுகின்றன. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என பல இடங்களில் இன்னும் போனஸ் பட்டுவாடா ஆரம்பிக்காத நிலையில், ஜவுளிக்கடைகளில் கூட இன்னும் கூட்டம் அதிகரிக்கவில்லை. சனி, ஞாயிறு தினங்கள் தவிர மற்ற நாட்களில் சொற்பமான அளவில்தான் வாடிக்கையாளர்கள் கூட்டம் காணப்படுகிறது.
தீபாவளி பரிசாக அலுவலகங்களில் இனிப்புகள் நிறைந்த ஸ்வீட் பாக்ஸ் மற்றும் பட்டாசு பாக்ஸ் அன்பளிப்பாக வழங்குவது பழக்கமாக இருந்து வருகிறது. அதனால், இன்னும் ஓரிரு தினங்களில் வியாபாரம் சூடுபிடிக்க அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்களிலும் இனிப்பு, பட்டாசு விற்பனை ஜரூராக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி தினத்தன்றும் பலர் காலை மற்றும் மாலை வேளைகளில் பட்டாசு விற்பனை நடப்பதும் வாடிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu