நீர்மட்டம் குறைந்து போனதால், வறட்சியில் தவிக்கும் விவசாயிகள்

நீர்மட்டம் குறைந்து போனதால், வறட்சியில் தவிக்கும் விவசாயிகள்
X

Tirupur News- திருப்பூரில் அதிகரித்து வரும் வறட்சியால், விவசாயிகள் தவிப்பு (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து போனதால், வறட்சியில் விவசாயிகள் தவிக்கின்றனர்.

Tirupur News,Tirupur News Today- தொடர் வறட்சியால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுள்ளது. ஆழ்துளை கிணறு அமைத்த போதும், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.

விவசாயத்தையும், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் உருவாக்கப்பட்டது. பவானி ஆற்று நீரை, குழாய்கள் மூலம் கொண்டு வந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்புவதற்கான திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. குளம், குட்டைகளில் நீர் ஏற்றி சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாதது, விவசாயிகள், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

திருப்பூர் கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி விவசாயிகள் குரல் எழுப்பினர். கோரிக்கை மனுக்களும் அளித்துள்ளனர்.

விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

பருவமழை பொய்த்ததால், அவிநாசி, ஊத்துக்குளி தாலுகா பகுதிகளிலும் திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்குபதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஊராட்சிகளில் வறட்சி நிலவுகிறது. இப்பகுதிகளில் விவசாயிகள், நடப்பு ஆண்டு வைகாசி பட்டத்தில் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலக்கடலை பயிரிட்டிருந்தனர். கோடை மழை பெய்யாததால் கடலை செடிகள், பூ, பிஞ்சுடன் காய்ந்து போய்விட்டன. வறட்சியால் ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது.

பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். பொதுமக்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த திட்டத்தை இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டுவராதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழக அரசு அவிநாசி - அத்திக்கடவு திட்டம் மூலம், குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பி,மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story