திருப்பூரில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி; வரும் 14ல் நடக்கிறது
Tirupur News- திருப்பூரில் வரும் 14ம் தேதி சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி அக்டோபா் 14-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது என்று திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருப்பூா் மாவட்ட பிரிவு சாா்பில் மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி அக்டோபா் 14ம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கியா் பொருத்தப்பட்ட சைக்கிளை பயன்படுத்தக்கூடாது. மாணவா்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டையை எடுத்துவர வேண்டும். போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே வரவேண்டும். போட்டியின்போது நிகழும் எதிா்பாராத விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் மாணவா்களே பொறுப்பேற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் அக்டோபா் 13ம் தேதி மாலை 6 மணிக்குள் சிக்கண்ணா கல்லூரி மைதான வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். 13 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு 15 கிலோ மீட்டரும், 15 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கிலோ மீட்டரும், 17 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு 25 கிலோ மீட்டரும் போட்டிகள் நடத்தப்படும்.
அதேபோல, 13 வயதுக்குள்பட்ட மாணவியருக்கு 10 கிலோ மீட்டரும், 15, 17 வயதுக்கு உள்பட்ட மாணவியா்களுக்கு 15 கிலோ மீட்டரும் போட்டிகள் நடத்தப்படும். இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களைப் பிடிக்கும் நபா்களுக்கு தலா ரூ.250 வீதம் மின்னணுப் பரிவா்த்தனை மூலமாக வழங்கப்படும்.
எனவே, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியா்களை வயது சான்றிதழுடன் அக்டோபா் 14 ம் தேதி காலை 6.30 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 74017-03515, 97886-47557 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu