திருப்பூரில் வரும் 28ம் தேதி மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

திருப்பூரில் வரும் 28ம் தேதி மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்
X

Tirupur News - திருப்பூரில் வரும் 28ம் தேதி மாவட்ட அளவிலான கிராமிய நடனம் உள்ளிட்ட கலை போட்டிகள் நடத்தப்படுகின்றன. (கோப்பு படம்)

Tirupur News- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

Tirupur News,Tirupur News Today- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவி இசை மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ளது. குரலிசை, கருவி இசை, பரதநாட்டியம் உள்ளிட்ட போட்டிகள் காலை 10 மணிக்கும், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 2 மணிக்கும் நடைபெறும். போட்டியில் குழுவாக பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிகபட்சம் 5 நிமிடத்துக்குள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

போட்டிகள்

குரலிசையிலும், நாதஸ்வரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசை போட்டிகளில் 5 வர்ணங்கள் மற்றும் கற்பனை இசை (மனோதர்ம இசை) நிகழ்த்தும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சாா்ந்தவர்கள் 5 தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

கிராமிய நடனத்தில் கரகாட்டம், கணியான் கூத்து, காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஓவிய தாள்கள் மட்டுமே வழங்கப்படும். அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவர்கள் கொடுக்கும் தலைப்பில் மட்டுமே ஓவியங்கள் வரைய வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் வரைய அனுமதிக்கப்படும்.

பரிசுகள்

மாவட்ட போட்டிகளில் வெற்றிபெறும் இளைஞர்களுக்கு முதல் பரிசாக ரூ.6,500, 2-ம் பரிசாக ரூ.4,500, 3-ம் பரிசாக ரூ.3,500 வழங்கப்படவுள்ளது. மேலும் முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான கலைப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் விவரங்களுக்கு கலை பண்பாட்டுத்துறை கோவை மண்டல அலுவலக செல்போன் எண் 0422-2610290 அல்லது 8925357377, 9790285608 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இத்தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story