கருவிழி பதிவு மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம்; திருப்பூரில் விரிவுபடுத்த கோரிக்கை

Tirupur News- கருவிழி படலம் பதிவு மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், கருவிழி பதிவு செய்து, வாடிக்கையாளர்களுக்கு உணவுப்பொருள் வழங்கும் நடைமுறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கண் கருவிழி பதிவு செய்து, ரேஷன் கார்டுதாரர் விவரங்களை உறுதிப்படுத்தும் புதிய நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கருவிழி பதிவு செய்யும் கருவி மற்றும் கைரேகை பதிவு, ரசீது வழங்கும் அம்சங்களை உள்ளடக்கிய புதிய 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி ஆகியவை, ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், வடக்கு தாலுகாவில் 25; காங்கயத்தில் 45 என, 70 ரேஷன் கடைகளுக்கு புதிய கருவிகள் வழங்கப்பட்டு, கருவிழி பதிவு செய்யப்பட்டு, உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுவருகிறது.
புதிய 'பாய்ன்ட் ஆப் சேல்' மெஷினிலேயே ரசீது அச்சிடும் வசதி உள்ளது. சில நொடிகளிலேயே ரேஷன் கடை எண், கார்டுதாரர் பெயர், உணவுப்பொருளின் பெயர் மற்றும் விலை உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய ரசீது பிரின்ட் செய்யப்பட்டுவிடுகிறது.
மாவட்ட குடிமைப்பொருள், கூட்டுறவுத்துறை வழங்கல் அதிகாரிகள், ரேஷனுக்கு கருவிகளை வழங்கும் ஓ.ஏ.எஸ்.ஒய்.எஸ்., நிறுவன தொழில்நுட்ப குழுவினர், கருவிழி பதிவு செய்து உணவுப்பொருள் வழங்கப்படுவது; ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா என்பது குறித்து கள ஆய்வு நடத்திவருகின்றனர்.
இந்த நடைமுறையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை
ரேஷன் கடைகளில், கைரேகை பதிவு செய்ய முடியாதவர்களை, தாசில்தாரிடம் சான்று பெற்றுவரக்கூறி திருப்பி அனுப்ப வேண்டியுள்ளது. குறிப்பாக முதியவர்கள் ஏராளமானோர், கைரேகை பதிவு செய்ய முடியாமல், தவிக்கின்றனர். கருவிழி பதிவு செய்யும் புதிய நடைமுறையால், கைரேகை பதிவு செய்ய முடியாதவர்களின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தி, உணவுப்பொருள் வழங்குவதில் இருந்த சிக்கல்கள் தற்போது விலகியுள்ளது. 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவியிலேயே ரசீது அச்சிடப்பட்டுவிடுவதால், ரேஷன் பணியாளர்களுக்கு, உணவுப்பொருளின் பெயர், விலை விவரங்களை கையால் எழுதவேண்டிய சிரமம் தவிர்க்கப்படுகிறது.
மாவட்டத்தில் 70 கடைகளுக்கு மட்டுமே கருவிழிப்பதிவு கருவி வழங்கப்பட்டுள்ளது; விரைவில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கருவிகள் வழங்கி, புதிய நடைமுறையை விரிவுபடுத்தவேண்டும். திருப்பூரில், புதிய 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி மற்றும் கருவிழி பதிவு கருவி வழங்கப்பட்ட கடைகளில், தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது. எந்த குறைபாடுகளும் இன்றி, சிறப்பான வகையில், கருவிழிப்பதிவு செய்து, உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுவருகிறது.
'பாய்ன்ட் ஆப் சேல்' கருவியில் உள்ள கை ரேகை பதிவு செய்தும், கைரேகை பதிவு செய்யமுடியாதோருக்கு கருவிழி பதிவு செய்தும், விவரங்கள் உறுதிப்படுத்தப்படுகிறது. இனி யாரும், கைரேகை பதிவு செய்ய முடியாமல் திரும்பிச்செல்ல வேண்டிய அவசியமில்லை. அதிகபட்சம் ஒரு நிமிடத்துக்குள், கைரேகை அல்லது கருவிழி பதிவு செய்து, ரசீது வழங்கிவிடமுடியும்.
ஏற்கனவே, பெரம்பலுார், அரியலுார் போன்ற பல்வேறு மாவட்டங்களில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. புதிய நடைமுறையை அனைத்து கடைகளுக்குகடைகளுக்கும் விரிவுபடுத்துவதில் பெரிய அளவிலான சிக்கல் ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களான பொதுமக்கள், பொருட்களை வாங்க வரிசையில் காத்திருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்க முடியும். அதே வேளையில் அதில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள், தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும் அதற்கேற்ப மாற்று வழிகளையும் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu