காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

தாராபுரம் அருகில், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் குடும்பங்களாக வசிக்கின்றனர். இவர்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சி நிர்வாகம் வழங்கும் தண்ணீர் போதுமானதாக இருப்பதில்லை. அதனால் காவிரி கூட்டுக்குடிநீரும் வழங்க வேண்டும் என்று கேட்டு வந்தனர். ஆனால், பலமுறை கோரிக்கை விடுத்தும், குடிநீர் வழங்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால், குடிநீர் பற்றாக்குறையால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கக்கோரி திடீரென 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் தாராபுரம்- உடுமலைப்பேட்டை ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல், தேங்கியதால் வாகன நெரிசல் அதிகரித்தது. அவசரமாக செல்ல வேண்டியவர்கள் பலரும், நெருக்கடியில் சிக்கி அவதிப்பட்டனர்.
இ்து குறித்து தகவல் அறிந்ததும் மறியல் நடந்த இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள், போலீசாரிடம் காவிரி கூட்டுக்குடிநீர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் வழங்கும் தண்ணீரை கூடுதலாக வினியோகிக்க வேண்டும் என கூறினர். இதுகுறித்த உறுதிமொழி அளிக்கும் வரை, போராட்டத்தை கைவிட மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
அதனை கேட்ட போலீசார், உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ஜீவானந்தம் ஆகியோரிடம் செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், போலீசாரிடம் கூறியதாவது:
கவுண்டச்சிபுதூர் ஊராட்சி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் மிகப்பெரிய ஊராட்சியாக உள்ளது. இதில் வசிக்கும் மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் காவிரி கூட்டுக்குடிநீர் வரும் குழாயில் நஞ்சையம்பாளையம், தொப்பம்பட்டி , வட்டக் கவுண்டச்சிபுதூர் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு ஒரே குழாயில் வரும் தண்ணீரை பகிர்ந்து அளிப்பதால், போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் ஏற்கனவே கூடுதலாக வழங்க கேட்டு மாவட்ட கலெக்டரிிடம் மனு கொடுத்துள்ளேன். அவர் அதற்கு அனுமதி வழங்கி நிதியும் வழங்குவதாக கூறியுள்ளார். நிதி வந்தவுடன் பணிகள் மேற்கொண்டு சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். அவர் போனில் கூறிய விஷயங்களை, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் போலீசார் விளக்கி கூறினர். உடனடியாக, மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அப்பகுதியை விட்டு கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu