தாராபுரம்; மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பலி
Tirupur News,Tirupur News Today- தாராபுரத்தில், மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி உயிரிழந்தார். (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் திருமுருகன் பூண்டி 1-வது வீதி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த தங்கவேல் மகன் பாலசுப்பிரமணி (வயது 58). இவர் தாராபுரம் பழைய கோட்டைமேட்டு தெருவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குலதெய்வமான வீரேஸ்வரா சாமி கோவிலில் பூசாரியாக பணிசெய்து வந்தார். நேற்று அமாவாசை தினம் என்பதால், திருப்பூரில் இருந்து, மதியம் கோவிலுக்கு வந்து கோவிலை சுத்தம் செய்துவிட்டு, அதன்பின் அங்கு இருந்த மின்விளக்குகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் பாலசுப்பிரமணி மயங்கி, கீழே விழுந்தார். இந்நிலையில் கோவிலுக்கு பூஜைக்காக வந்த பக்தர்கள், பூசாரி மயங்கி விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தஜர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, பூசாரி பாலசுப்பிரமணியை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பாலசுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், பாலசுப்பிரமணி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான கோவில் பூசாரி பாலசுப்பிரமணிக்கு, திருப்பூரை அடுத்துள்ள திருமுருகன் பூண்டியில் ஜமுனா ராணி (50) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமாவாசை நாளில், கோவில் பூசாரி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது, பழைய கோட்டைமேட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மாற்று ஏற்பாடு அவசியம்
பெரும்பாலான சிறு கோவில்கள் மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்கள் வழிபடும் கோவில்கள் பெரும்பாலும் மாதத்தில், அமாவாசை தினத்தில் மட்டுமே கோவில் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில், எவ்வித பராமரிப்பும் இல்லாமல் கோவில் மூடியே இருக்கின்றன. அதனால், இதுபோல் மின் பழுதுகள் ஏற்படும் பட்சத்தில், ஒரு நாள் பூஜைக்காக கோவிலுக்கு வருவோர், மின்சார பழுதுகளை தானே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டால், திடீரென மின் விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. தவிர, பல ஆண்டுகளான கோவில்களில், மின்சாரம் பராமரிப்பு, மின் விளக்குகள், மின்சாதனங்கள் பராமரிப்பு என்பது நிச்சயமாக இருப்பதில்லை. அதுவும் இதுபோன்ற மின்சார விபத்துகளுக்கு முக்கிய காரணமாகிறது.
எனவே, கோவில்களில் மின்பராமரிப்பு குறித்த மாற்று ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகம் தீவிர கவனம் செலுத்துவது மிக முக்கியம். பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள மின்சார சாதனங்களை, அனுபவம் வாய்ந்த பணியாளர்களை கொண்டு, பழுதுகளை சரிசெய்து இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பது மிக முக்கியம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu