இரும்பு கம்பியால், தந்தையை அடித்துக் கொலை செய்த ‘குடி’ மகன்; தாராபுரம் அருகே பரபரப்பு
Tirupur news, Tirupur news today- தாராபுரம் அருகே, குடிபோதையில் மகன், தந்தையை இரும்பி கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. (கோப்பு படம்)
Tirupur news, Tirupur news today.- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டிணம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 60). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் காளிதாஸ் (29). இவருடைய மனைவி காவியா. காளிதாஸ் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை, அவருடைய தந்தை தண்டபாணி கண்டித்துள்ளார். இதன் காரணமாக தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையில் இவர்களது வீட்டிற்கு வரும் குடிநீர் குழாய் உடைந்து போனதால், வீட்டில் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். எனவே, குடிநீர் குழாயை சீரமைக்குமாறு காளிதாசை அவருடைய தந்தை வற்புறுத்தியுள்ளார். ஆனால், காளிதாஸ் அதை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு காளிதாஸ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். நெல் அறுவடை பணியை முடித்துக்கொண்டு தண்டபாணியும் வீட்டிற்கு வந்தார். குடிபோதையில் வீட்டில் படுத்திருந்த காளிதாசிடம், ‘குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து விட்டாயா’ என்று தண்டபாணி கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தந்தை-மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மகனை கண்டிக்க, இரும்பு கம்பியை எடுத்து தண்டபாணி மிரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த காளிதாஸ் இரும்பு கம்பியை தந்தையிடம் இருந்து பறித்து, அவரின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த தண்டபாணி ரத்த வெள்ளத்தில், கீழே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் தண்டபாணியை, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தண்டபாணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அலங்கியம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu