தொடர் மழையால் பருத்தி மகசூல் பாதிப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், 300 எக்டர் பரப்பளவில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டு, அதிகளவு விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தொடர் மழை பெய்து வருவதால், அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வேர் அழுகல் நோய் தாக்க துவங்கியுள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், அவினாசி சுற்றுவட்டார பகுதிகளிலும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், புதன் தோறும் பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது.
நேற்று நடந்த ஏலத்தில், 30 டன் பருத்தி கொண்டு வரப்பட்டது. 279 விவசாயிகள், 10 வியாபாரிகள் பங்கேற்றனர். இதில், ஆர்.சி.எச்., ரக பருத்திக்கு, குவின்டாலுக்கு, 7,500 ரூபாய் முதல், 8,560 ரூபாய் விலை கிடைத்தது. டி.சி.எச்., ரக பருத்தி, 9,000 முதல், 11 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. மொத்தம், 21 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. 'தொடர் மழையால், வரத்து குறைந்தது' என, விற்பனைக்கூட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu