'புரஸ்கார்' விருது பெற ஆர்வம்: சாரண, சாரணியர் பங்கேற்பு
சாரண, சாரணியர்களுக்கு 'ராஜ்ய புரஸ்கார்' என்ற கவர்னர் விருதுக்கான தேர்வு நடைபெற்ற காட்சி.
திருப்பூர் கல்வி மாவட்ட சாரண, சாரணியர் இயக்கம் சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சாரண, சாரணியர்களுக்கு 'ராஜ்ய புரஸ்கார்' என்ற கவர்னர் விருதுக்கான தேர்வு, பொங்குபாளையம் பகுதியில் உள்ள சக்தி விக்னேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
முகாமில், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 142 சாரணர்கள், 103 சாரணியர்கள் என 245 பேர் கலந்து கொண்டனர். சாரணர் இயக்க கொடியேற்றத்துடன் முகாம் துவங்கியது. இந்த தேர்வை மாநில சாரண சாரணிய அமைப்பு ஆணையரும், திருப்பூர் முகாம் தலைவியுமான சண்முகநாச்சியார் துவக்கி வைத்தார். பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டன.
தூரம் மற்றும் உயரத்தை அளவிடுதல் குறித்து செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது. முகாமில், சாரண சாரணியர் அணிந்து வந்த உடைகள் அதில் இருந்த பேட்ஜ், சாரணிய உறுதிமொழி, சாரணிய சட்டங்கள், கொடிபாடல், தேசிய கீதம், அனைத்து கொடிகள் பற்றிய கேள்விகள் மற்றும் வரைபடங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது.
முதலுதவி சிகிச்சை செய்வது எப்படி? கயிறை கொண்டு பல்வேறு முடிச்சுகள் போடுவது, சிக்னல், வரைபடங்கள் குறித்து விளக்கம் அறிவது தொடர்பான தேர்வும் நடந்தது. மாநில சாரண சாரணிய உதவி செயலாளர் எஸ்.எம்.மனோகரன் பங்கேற்று, தேர்வு நடக்கும் விதம் குறித்து ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட சாரண சாரணியர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட உதவி ஆணையருமான ராஜாராம், மாவட்ட செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் தனசிங் ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu