குண்டடம்; மக்காச்சோளப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
Tirupur News- குண்டடம் பகுதியில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டம், குண்டடம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மக்காச்சோள பயிா்கள் கதிா்விடத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், குண்டடம் அருகேயுள்ள உப்பாறு அணை மற்றும் உப்பாறு ஓடையை ஒட்டியுள்ள ஒட்டபாளையம், கள்ளிவலசு, மருதூா், பெல்லம்பட்டி, நவநாரி, பெரியகுமாரபாளையம், கள்ளிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்கச்சோளப் பயிா்களைக் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன.
இரவு நேரங்களில் மக்காச்சோளத் தோட்டத்தில் நுழையும் காட்டுப் பன்றிகள் மக்காச்சோளத் தட்டுகளை கீழேத் தள்ளி கதிா்களை தின்கின்றன. தட்டுகளையும் சேதப்படுத்தி வருவதால் கால்நடை தீவனத்துக்குக்கூட பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். தினசரி மக்காச்சோளத் தோட்டத்தில் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த வயல்களைச் சுற்றிலும் வண்ணச் சேலைகளை கட்டுதல், பிளாஸ்டிக் பைகளை குச்சியில் கட்டி தொங்கவிடுதல், பழைய சிடிக்களை கட்டி விடுதல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஒட்டபாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது: காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்கு இரவு நேரங்களில் அவ்வப்போது பட்டாசுகளை வெடித்தும், கம்பிகளைக் கட்டியும் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆண்டுதோறும் காட்டுப் பன்றிகளால் மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்து வருகின்றன. காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தும் பயிா்களை ஆய்வு செய்யும் வனத் துறையினா் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறுகின்றனா். ஆனால், எந்தவித இழப்பீடுத் தொகையும் இதுவரை பெற்றுத்தரவில்லை.
இழப்பீடு கிடைக்காவிட்டாலும், மக்காச்சோளப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu