டெங்கு காய்ச்சல் பரிசோதனை முடிவுகள்; தாமதம் தவிர்க்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
Tirupur News- டெங்கு காய்ச்சல் குறித்த பரிசோதனை முடிவுகளில் தாமதம் கூடாது என, சுகாதாரத்துறை அறிவுறுத்தல் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- டெங்கு காய்ச்சல் பரிசோதனை முடிவுகளில் தாமதம் கூடாது. மாதிரி எடுத்த 6 மணி நேரத்துக்குள் முடிவுகளை வழங்கி விட வேண்டும் என ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு தொடர்பவர்கள் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்கின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை பணிகளை வேகப்படுத்த வேண்டும். மாதிரி எடுத்த அடுத்த 6 மணி நேரத்துக்குள், நோயாளிக்கு பரிசோதனை விபரங்களை அளித்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தரப்பில் இருந்து, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு விட்டால் அவர் குறித்த விபரங்களை உடனடியாக நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி, மாநகராட்சி நகர் நல அலுவலர், சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக தொடர் காய்ச்சல், தலைவலி, உடல்வலி என பல்வேறு உடல் நல பாதிப்புகள் இருந்தாலும் சிலர், மெடிக்கல் மருந்து கடைகளில் மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவது, வீட்டிலேயே கசாயம் சாப்பிட்டு, ஆவி பிடிப்பது அல்லது வேறு விதமான மருந்துகளை உட்கொண்டு குணப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர். இது மிகவும் தவறானது. தொடர்ந்து உடல் நல பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, அங்குள்ள டாக்டரின் அறிவுறுத்தலின்படி மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu