பட்டுப்புழு வளர்ப்பில் வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை

Tirupur News,Tirupur News Today- பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில், விவசாயிகள் ஏமாற்றம். (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு இடர்பாடுகளால் சாகுபடி பணிகளை திறம்பட செய்ய இயலாமல் தவித்து வருகின்ற விவசாயிக்கு கை கொடுத்து உதவும் தொழிலாக பட்டுப்புழு வளர்ப்பு உள்ளது. குறைவான நாட்களில் மாதந்தோறும் வருமானம் ஈட்டலாம் என்பதால் வழிமுறை தெரிந்த விவசாயிகள் தகுந்த பயிற்சி பெற்று அதிகாரிகளின் வழிகாட்டுதல், உதவியுடன் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக இளம்புழுக்கள் உற்பத்தி மையங்களில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் உரிய ஆய்வு செய்யாததால் தரமற்ற முட்டை, வீரியம் இல்லாத புழுக்களே விவசாயிகளுக்கு கிடைப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
புழுக்களின் நிலையை விவசாயிகள் கண்டறிய முடியாது என்பதால் இளம்புழுக்கள் மையத்தில் கொடுக்கப்படும் முட்டை தொகுப்பை கொண்டு வந்து பராமரிப்பு செய்து வருகின்றனர். அவை உற்பத்தியை எட்டும் நிலையில் கூடு கட்டாமல் இறந்து வருகிறது. இதனால் இலவு காத்த கிளி போல் இறுதியில் பலன் கிடைக்கும் என்று காத்திருந்த விவசாயிக்கு சொல்லில் அடங்காத அளவிற்கு இழப்பு ஏற்பட்டு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இது குறித்து உடுமலை, கண்ணம்மநாயக்கனூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது,
பல்வேறு பகுதியில் இருந்து பெறப்படும் முட்டைகளை தனியார் இளம் புழுக்கள் மையம் வளர்த்து முட்டை தொகுப்பாக விவசாயிக்கு அளிக்கிறது.அதை வாங்கி வந்து இரவு பகலாக கண்விழித்து பாதுகாத்து பராமரிக்கிறோம். சாகுபடி பணியில் நஷ்டம் அடைந்த விவசாயிகள் மாற்றுத் தொழிலாக பட்டு வளர்ப்பு உள்ளது. மாதந்தோறும் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும் என்பதால் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றோம்.
ஆனால் கடந்த சில மாதங்களாக விவசாயிகளுக்கு தரமற்ற முட்டை, வீரியமில்லாத புழுக்கள் வழங்கப்படுகிறது. புழுக்களாக வாங்கி வரும் போது விவசாயிகளுக்கு குறைபாடுகள் தெரியாது.புழுக்கள் வளர்ந்து கைக்கு வருமானத்தை அளிக்கக்கூடிய நிலையிலேயே இந்த விவரம் தெரிய வரும். அப்போது விவசாயியின் மொத்த உழைப்பு, காலநேரம் வீணாகி விடுகிறது. கடந்த ஆண்டு வரை இன்சூரன்ஸ் பணத்தை அரசே செலுத்தி வந்தது. இந்த ஆண்டில் எங்கள் தரப்பில் செலுத்தினோம். ஆனால் அதுவும் முறைப்படி கிடைக்கவில்லை.
இதனால் பட்டுப்புழு வளர்ப்பில் மொத்த நஷ்டமும் விவசாயிகள் சுமக்க வேண்டி உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். துறையின் பெயரில் தான் வளர்ச்சி உள்ளது தவிர விவசாயின் உழைப்பு வாழ்வாதாரம் தேய்ந்து வருகிறது. இதனால் அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் இளம்புழுக்கள் வளர்ப்பு மையத்தில் உரிய முறையில் ஆய்வு செய்து தரமான முட்டை, வீரியம் உள்ள புழுக்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முன் வர வேண்டும். மேலும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu