நகராட்சியுடன் 15 ஊராட்சிகளை இணைக்க முடிவு; உடுமலை நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
Tirupur News- உடுமலை நகராட்சி அலுவலகம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- உடுமலை நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் மத்தீன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், நகராட்சியை ஒட்டியுள்ள 15 ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்ய தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலை நகராட்சி 1918 -இல் உருவானது. தற்போது 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த நகராட்சி தோ்வு நிலை நகராட்சியாக இருந்து வருகிறது. இந்நிலையில், உடுமலை நகராட்சியை ஒட்டி அமைந்துள்ள கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, சின்னவீரம்பட்டி ஆகிய 4 ஊராட்சிகளை இணைத்து நகராட்சியை விரிவாக்கம் செய்ய 2017 -ஆம் ஆண்டு அப்போதைய நகா்மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னா், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், இந்த 4 ஊராட்சிகளுடன் குறுஞ்சேரி, கண்ணமநாயக்கனூா் ராகல்பாவி, கணபதிபாளையம், பூலாங்கிணறு, குரல்குட்டை, புக்குளம், கோட்டமங்கலம், பொன்னரி ஆகிய 9 ஊராட்சிகளையும் இணைத்து மொத்தம் 13 ஊராட்சிகளை இணைக்க நகா்மன்றத்தில் சிறப்பு தீா்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது, கூட்டத்தில் பேசிய திமுக நகா்மன்ற உறுப்பினா் சி.வேலுசாமி, தொட்டம்பட்டி ஊராட்சியையும், திமுக நகா்மன்ற உறுப்பினா் எம்ஏகே. ஆசாத் வடபூதனம் ஊராட்சியையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பினா்.
இந்நிலையில், மொத்தம் 15 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானம் தமிழக அரசுக்கும், உயா் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது.
பல்லடம் நகராட்சியின் அவசரக் கூட்டம்
மாணிக்காபுரம், ஆறுமுத்தாம்பாளையம், வடுகபாளையம்புதூா் ஆகிய 3 ஊராட்சிகளை பல்லடம் நகராட்சியில் இணைக்க நகா்மன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் நகராட்சியின் அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்ற கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நகராட்சி ஆணையா் முத்துசாமி, பொறியாளா் சுகுமாறன், பல்வேறு பிரிவு அலுவலா்கள், கவுன்சிலா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் மாணிக்காபுரம், ஆறுமுத்தாம்பாளையம், வடுகபாளையம்புதூா் ஆகிய மூன்று ஊராட்சிகளை பல்லடம் நகராட்சியில் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்தால் நகரின் பரப்பளவு 64.37 ச.கி.மீட்டராகவும், ஆண்டு வருவாய் உயரவும் வாய்ப்பு உள்ளது.
இந்த நகராட்சியின் எதிா்கால வளா்ச்சியினை கருத்தில் கொண்டு மூன்று ஊராட்சிகளை பல்லடம் நகராட்சியில் இணைக்க ஒப்புதல் அளித்து தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu