தென்னை மரங்களில் கருந்தலைப்புழு தாக்குதல்; திருப்பூர் விவசாயிகள் அதிர்ச்சி
Tirupur News,Tirupur News Today- தென்னை மரங்களில், கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, வேளாண் துறை அறிவுரை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி, பிரதானமாக உள்ளது. கடந்த 2ஆண்டாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். தேங்காய்க்கு 23 முதல் 25 ரூபாய் விலை கிடைத்தால் தான் உர விலை, விவசாய தொழிலாளர் கூலி உள்ளிட்ட செலவினங்களை ஈடுகட்ட முடியும் என விவசாயிகள் கூறி வந்தனர்.
ஆனால் தோட்டங்களில் இருந்து தேங்காய்க்கு 8 முதல் 9 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தொடர்ந்து விலை வீழ்ச்சி தென்பட்ட நிலையில் விவசாயிகள் தென்னை மரங்களை பராமரிப்பதில் முழு கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் உடுமலை, காங்கயம், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தென்னை மரங்களில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் தென்பட துவங்கியுள்ளது. இதனால் தென்னை மர இலைகள் காய்ந்து பழுப்பு நிறத்திற்கு மாறியுள்ளன. ஏற்கனவே, தேங்காய் விலை வீழ்ச்சியால் ஆங்காங்கே சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் குதித்துள்ள விவசாயிகளுக்கு, இப்பிரச்சினை கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வருவது குறித்து, வேளாண் துறை மற்றும் பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இதனிடையே தென்னை விவசாயத்தில், மரத்தின் வயதுக்கு ஏற்ப ஊடுபயிர் சாகுபடி செய்து வருவாய் ஈட்டலாம் என தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடுமலை மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில், 12,500 ஹெக்டேரில் தென்னை சாகுபடி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள், காய் மற்றும் பயிறு வகை சாகுபடியை காட்டிலும் தென்னை விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். தென்னையில் ஊடுபயிராக மரத்தின் வயதுக்கு ஏற்ப பயிர்களை பயிரிட வேண்டும். தென்னை நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து 8 வயது வரை கடலை, எள்ளு, நெல், வாழை போன்றவை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.இந்த 8 ஆண்டு காலத்தில் சூரியஒளி ஊடுபயிர்களுக்கு நன்றாக கிடைக்கும். இதனால் பயிர்கள் செழிப்பாக வளரும். தென்னையின்8 வயது முதல் 15 வயது வரை, மரத்தின் நிழல் அதிக அளவு இருக்கும். அப்போது நிழலில் வளரும் தோட்டக்கலை பயிர்களான, உளுந்து, கொள்ளு, பாசி பயிறு, சோயா மற்றும் கால்நடை தீவன பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். 20 வயதிற்கு மேல் தென்னையில் ஊடுபயிராக, ஜாதிக்காய், வாழை, குறுமிளகு போன்றவை பயிரிடலாம்.
இதில் குறுமிளகு நன்கு விளைச்சல் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஒரு செடியில் வருடத்திற்கு 2 கிலோ வரை குறுமிளகு கிடைக்கிறது.ஒரு ஏக்கர் தென்னையில் 70 மரம் வரை நடவு செய்யலாம். இதில் ஊடுபயிராக ஒரு மரத்திற்கு ஒரு குறுமிளகு செடி பயிரிட்டால் வருடத்திற்கு 140 கிலோ குறுமிளகு கிடைக்கிறது. இதில் நன்றாக வருவாய் கிடைக்கும்.ஊடுபயிர் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை தோட்டத்தின் தண்ணீர், உரம், ஆள் கூலி போன்ற செலவினங்களுக்கு பயன்படுத்தலாம். தென்னையில் கிடைக்கும் வருமானம் விவசாயிகளுக்கு முழுவதுமாக கிடைக்கும்.
இவ்வாறு, ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu