திருப்பூரில் குடிநீர் திட்டப்பணிகளை கண்காணிக்க குழுக்கள்; கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல்

Tirupur News,Tirupur News Today - கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடந்தது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் முத்தூர், காங்கயம், வெள்ளகோவில் குடிநீர் திட்டப்பணிகளை கண்காணிக்க ஆர்.டி.ஓ. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.
முத்தூர்-காங்கயம் கூட்டு குடிநீர் திட்டம்-1 மற்றும் வெள்ளகோவில் காங்கயம் நகராட்சி கூட்டு குடிநீர் திட்டம்-2 மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வரும் குடிநீர் திட்ட அளவுகளை கண்காணிக்கவும், முத்தூர்-காங்கயம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை கண்காணிப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்து, ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது,
ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.62 கோடி 29 லட்சத்தில் முத்தூர்- காங்கயம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை மறு சீரமைப்பு பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முத்தூர்- காங்கயம் கூட்டுக்குடிநீர் திட்டம்-1 மற்றும் வெள்ளகோவில் காங்கயம் நகராட்சி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை கண்காணிக்கும் வகையில் தாராபுரம் ஆர்.டி.ஓ. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உறுப்பினர் செயலாளராக நிர்வாக பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உறுப்பினர்களாக உதவி இயக்குனர்கள் (பேரூராட்சிகள்), (ஊராட்சிகள்), மின்வாரிய செயற்பொறியாளர், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் ஆகியோர் செயல்படுவா்.
இந்த குழு, நடைமுறையில் உள்ள திட்டங்களில் சீரான குடிநீர் வினியோகம் நடைபெறுவதை உறுதி செய்தும், குடிநீர் வினியோகம் செய்யப்படும் அளவை ஊராட்சி மற்றும் நகராட்சி வாரியாக நேரடியாக ஆய்வு செய்தும், மறுசீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பணி நடைபெற்று வரும் இடங்களில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் உடனடியாக குடிநீர் வடிகால் வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும்.
பணியின்போது குழாய் உடைப்பு ஏற்பட்டு பழுது ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கண்ணன், நகராட்சி ஆணையாளர்கள் வெங்கடேசன் (காங்கயம்), மோகன்குமார் (வெள்ளகோவில்), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஜெகதீசன், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu