திருப்பூர்; தோட்டக்கலைப் பயிா்களை பாதுகாப்பது குறித்து, கலெக்டர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
Tirupur News- தோட்டக்கலை பயிர்கள் பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தல் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் பருவமழை மற்றும் பலத்த காற்றின்போது தோட்டக்கலைப் பயிா்களை பாதுகாப்பது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உள்ளே புகாதவாறு பாதுகாக்க வேண்டும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை அகற்ற வேண்டும். நிழல் வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை போன்ற பயிா்களில் காய்ந்த மற்றும் பட்டுப் போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையுமாறு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்காத வகையில் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும்.
கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருந்தால் உடனடியாக வோ் பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். மரங்களுக்குத் தேவையான தொழு உரங்களை இடவேண்டும். நோய் தடுப்புமுறைகளை பின்பற்ற வேண்டும். காற்றினால் வாழை பாதிக்கப்படுவதைத் தடுக்க மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யுகலிப்டஸ் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிா்ந்த தாா்களை அறுவடை செய்ய வேண்டும்.
தோட்டக்கலைப் பயிா்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லி போன்ற பயிா்களுக்கு உரிய காலத்தில் பயிா் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீா் தேங்காதவாறு உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். நீா்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
காற்றினால் ஏற்படும் சேதத்தைத் தவிா்க்க காற்று வீசும் திசைக்கு எதிா்திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாத வகையில் பாதுகாக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிா்ப்பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu