‘செஞ்சுரி’ அடித்த சின்ன வெங்காயம், தக்காளி விலை; இல்லத்தரசிகள் தவிப்பு
Tirupur News,Tirupur News Today- சின்ன வெங்காயம், கிலோ ரூ. 100க்கு விற்கப்படுகிறது.
Tirupur News,Tirupur News Today- ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதால் அதன் விலை, வெங்காயம் உரிக்காமலேயே பெண்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது.
பொதுவாக வெங்காயத்தை உரிக்கும் போதுதான் கண்ணில் கண்ணீர் வரும். ஆனால் தற்போது சின்ன வெங்காயம் விலையில் சதமடித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதால் அதன் விலையை கேட்டதுமே பெண்களுக்கு கண்ணீர் வருகிறது. சமையலில், முக்கியமாக வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் சமையலின் சுவையை அதிகரிக்க செய்வது சின்ன வெங்காயம்தான்.
இந்நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை, கடுமையாக உயர்ந்துள்ளது. திருப்பூரில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 5 கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே 3 மாதங்களுக்கு முன்பு 3 கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.60 என மாறியது. தற்போது கடந்த சில தினங்களாக ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே தக்காளியின் விலை அதிகமாக உள்ள நிலையில், தற்போது வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த சாலையோர வெங்காய வியாபாரிகள் சிலர் கூறுகையில்,
திருப்பூருக்கு அவிநாசி, சேவூர், பல்லடம், ஜல்லிப்பட்டி, பொங்கலூர், கொடுவாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து அதிக அளவில் சின்ன வெங்காயம் வரும். ஆனால் தற்போது உள்ளூர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து திருப்பூருக்கு வெங்காயம் வருகிறது. அதுவும் போதுமான அளவில் இல்லை என்பதால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
தரமான வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், இரண்டாம் ரகம் ரூ.60 முதல் ரூ.80 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சின்ன வெங்காயம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது. பெரும்பாலானோர் சின்ன வெங்காயத்திற்கு பதில் பெரிய வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். பெரிய வெங்காயம் 3 கிலோ 100 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
சின்ன வெங்காயம் விலை உயர்வால், பெரிய வெங்காயத்தை பலரும் பயன்படுத்துவதால் அதன் விலை 4 கிலோ 100 ரூபாய்க்கு விற்றது, இப்போது 3 கிலோ 100 ரூபாயாக மாறியுள்ளது. இன்னும் சின்ன வெங்காயம் விலை அதிகரிக்கும் பட்சத்தில், பெரிய வெங்காயம் தேவை அதிகரித்தால், அதுவும் 2 கிலோ ரூ.100 ஆக மாறவும் வாய்ப்புள்ளது. அதுபோல், கடந்த மாதம் ரூ. 10க்கு விற்கப்பட்ட தக்காளி கிலோ, இப்போது 120ரூபாய்க்கு விற்கப்படுவதும், இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆப்பிள் விலையை போல, தக்காளி விலையும் மாறிவிட்டதாக, பெண்கள் பலரும் புலம்பித் தீர்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu