தீபாவளி ஆர்டர்கள் குறைந்ததால், பனியன் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்
திருப்பூரில், தீபாவளி ஆர்டர்கள் குறைந்ததால், பனியன் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்.
Banian Manufacturers in Tirupur - உள்நாட்டு சந்தைக்காக பனியன் ரகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், திருப்பூரில் ஏராளமாக உள்ளன. இந்நிறுவனங்களுக்கு கோடை, குளிர் பருவ காலங்கள், பொங்கல், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஆடை தயாரிப்பதற்கான ஆர்டர் அதிகளவில் கிடைப்பது வழக்கம். பனியன் உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை என்பது மிக முக்கியமானது. நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து, தீபாவளி பண்டிகைக்காக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர் கிடைக்கிறது. தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி போனஸ் வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் சரிந்தது. அபரிமிதமான நூல்விலை உயர்வு, உள்நாட்டில் வர்த்தக பாதிப்பு போன்றவை காரணமாக ஏற்கனவே ஆர்டர் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு துவக்கம் முதல் திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு ஆர்டர் குறைவாகவே உள்ளது.
திருப்பூரை நோக்கி இதுவரை புதிய ஆர்டர்கள் வருகை குறைவாகவே உள்ளதால் உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், அதை சார்ந்த நிட்டிங், சாயஆலை, பிரிண்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட ஜாப்ஒர்க் தொழில் நிறுவனங்களும் கவலை அடைந்துள்ளன. தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 45 நாட்களே இருப்பதால் பின்னலாடை தயாரிப்பு ஆர்டர்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொழில்துறையினர் உள்ளனர். நூல்விலையை உயர்த்தாமல் இருந்தால் கிடைக்கும் ஆர்டர்களை செய்து மீண்டும் தொழிலை பாதுகாக்க முடியும் என்பதே ஒட்டுமொத்த பனியன் உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வடமாநிலங்களில் கனமழையால், பனியன் தயாரிப்பு ஆர்டர்கள் குறைந்துள்ளது. ஏற்கனவே தயாரித்து அனுப்பிய ஆடைகள் விற்பனையின்றி, வெளிமாநிலங்களில் அதிகமாக தேங்கியுள்ளது. மக்களிடம் வாங்கும் திறன் குறைந்து விட்டது. ஆடைகளுக்காக செலவு செய்வதை மக்கள் குறைத்துவிட்டனர். மேலும் கடந்த 2020-ம் ஆண்டு விற்கப்பட்ட ஒரு ஆடையின் விலை தற்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆடை விற்பனை மந்தமடைந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது தீபாவளி பண்டிகைக்கான உள்நாட்டு ஆர்டர்கள் அதிகளவில் வந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை ஆர்டர் மிக குறைவாகவே உள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கான ஆர்டர் வரத்தும் குறைந்து விட்டது. குறிப்பாக உக்ரைன்-ரஷியா போருக்கு பின்னர் ஐரோப்பிய நாடுகளில் ஆடை விற்பனை சரிந்து விட்டது. அமெரிக்காவில் கூட ஆடை விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் புதிய ஆர்டர்கள் வரவில்லை என, பனியன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu