வெங்காய ஏற்றுமதிக்கு தடை; மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்
Tirupur News-வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்க நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
வெங்காய ஏற்றுமதியை டிசம்பா் 8-ம் தேதி முதல் 2024 மாா்ச் 31-ம் தேதி வரை மத்திய அரசு தடை செய்துள்ளது. 2024 -ம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்நாட்டில் வெங்காய விலை கட்டுக்குள் இருப்பதற்காக மத்திய அரசு இந்த தடையை செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு 16.8.2023 -ல் இருந்து 40 சதவீதம் வரி விதித்து வெங்காய விவசாயிகளுக்கு மத்திய அரசு ஏற்கெனவே பெரும் நஷ்டத்தை உருவாக்கியுள்ளது.
ஏற்றுமதி செய்யும்போது சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி குறியீட்டு எண் ஒரே எண்ணாக இருந்து வருகிறது. இதனால், பெரிய வெங்காயத்துக்கு தடை விதிக்கப்படும்போது சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டு விடுகிறது. இதைப் பிரித்து சின்ன வெங்காயத்துக்கு தனி எண்ணை உருவாக்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளது. இதை மத்திய அரசு தற்போதுவரை நிறைவேற்றாமல் உள்ளது.
சின்ன வெங்காயம் ஒரு கிலோ உற்பத்தி செலவு குறைந்தபட்சம் ரூ.30 -ஆக இருந்து வருகிறது. குறைந்தபட்ச லாபத்தோடு ரூ.45-க்கு விற்றால் மட்டுமே கட்டுப்படியாக கூடிய சூழ்நிலையில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட 40 சதவீத வரியும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடையும் சின்ன வெங்காய விவசாயிகளை பெரும் நஷ்டத்தில் தள்ளிவிடும்.
நுகா்வோரை மட்டுமே மனதில் கொண்டும், தோ்தல் அரசியலைக் கருத்தில் கொண்டும் விவசாயிகளின் நிலையைக் கண்டு கொள்ளாத மத்திய அரசின் இந்த செயல் கண்டனத்துக்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu