மொட்டை அடித்து, விவசாயிகள் நூதன போராட்டம்; திருப்பூரில் பரபரப்பு
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், தலையில் பாய், தலையணையை சுமந்து வந்து போராட்டம் நடத்திய விவசாயிகள்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள் மற்றும் வீடு, மனை உரிமையாளர்கள் இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று நடந்தது. இதில் விவசாயிகள் பாய் தலையணையை தலையில் சுமந்து வந்து கலந்து கொண்டனர்.
அரசு வழங்கிய இனாம் நிலங்களை கையகப்படுத்தும் இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கையை கண்டித்தும், சட்டப்படி தீர்ப்பாயம் அமைத்து விசாரிக்க கோரியும், விவசாயிகள் விரோத கொள்கையை கைவிடக்கோரியும் இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இயக்க துணை ஒருங்கிணைப்பாளர் வெல்கேஷ் தலைமை வகித்தார். தமிழக அரசால் 1963-ம் ஆண்டு சிறு இனாம்கள் ஒழிப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி உழவர்களின் வீடு மற்றும் மனை உரிமையாளர்களின் உரிமை ஆக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை, வக்பு வாரியம் அபகரிக்கும் பணியை தமிழகம் முழுவதும் செய்து வருகிறது. உரிமையியல் நடைமுறை சட்டத்தின்படி விசாரிக்க வேண்டும். சொந்த நாட்டில் விவசாயிகளை அகதிகள் ஆக்கும் நடைமுறையை இந்து சமய அறநிலையத்துறை கைவிட வேண்டும். சட்டத்திருத்தம் செய்து அந்த நிலங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இவ்வாறு பாதிப்பில் உள்ளது. உரிய தீர்வு இல்லாவிட்டால் சென்னை தலைமை செயலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் பானை, குடம், பாய், தலையணை, தட்டு முட்டு சாமான்களை தலையில் வைத்தபடி கோஷங்கள் எழுப்பினா். மேலும் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து 3 விவசாயிகள் மொட்டை அடித்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். பின்னர் அங்கேயே மதியம் சாப்பிட்டனர். காத்திருப்பு போராட்டம் மாலை வரை நடந்தது.
முன்னதாக குமரன் நினைவக நிழலில் நின்ற விவசாயிகளை போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, மாநிலச்செயலாளர் முத்து விஸ்வநாதன், மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu