சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்
Tirupur News- சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து இன்று பக்தர்கள் விரதம் துவங்கினர் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருடந்தோறும் செல்வது வழக்கம். குறிப்பாக மகர ஜோதிக்கு லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் செல்வார்கள். அதன்படி கார்த்திகை மாத பிறப்பான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இ்ன்று காலை திருப்பூரில் உள்ள அய்யப்பன் கோவில், ஈஸ்வரன் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கடைகளில் துளசிமணி மாலை, வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்களை நேற்று முதலே கடைகளில் வாங்கினர்.
விரதம் இருக்கும் அய்யப்பபக்தர்கள் அவரவர் வசதிக்கு தகுந்தவாறு ஒரு மண்டலம் (41 நாட்கள்), அரைமண்டலம் (21 நாட்கள்) விரதமும், இன்னும் சிலர் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து மகரஜோதி வரைக்கும் 2 மாதமும் விரதம் இருக்க தொடங்கி உள்ளனர். சபரிமலைக்கு செல்பவர்கள் கோவில்களில் குருசாமியின் மூலம் துளசிமணி மாலைகளை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். இன்று முதல் தினமும் அதிகாலையிலும், மாலையிலும் இருவேளை குளித்து அருகாமையில் உள்ள கோவில்களுக்கு சென்று அய்யப்ப சரணகோஷமிட்டு வழிபடுவார்கள்.
இதேப்போல் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பல்லடம், காங்கயம், தாராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
வெள்ளகோவில் தர்மசாஸ்தா அய்யப்பசாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொருவராக மாலை அணிவித்துக் கொண்டனர். மண்டலகால பூஜையை முன்னிட்டு இன்று முதல் மார்கழி 11-ம் தேதி வரை தினசரி காலை 5.30 மணிக்கு தர்மசாஸ்தா அய்யப்பசாமி கோவிலில் நெய் அபிஷேகம் நடைபெற உள்ளது.
பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன், சபரிமலை செல்வதற்காக விரதம் மேற்கொண்டு கருப்பு மற்றும் புளு கலரில் வேட்டி துண்டுகளை கட்டிக்கொண்டனர். மேலும் துளசி மற்றும் சந்தன மாலைகளை அணிந்து கொண்டனர். இக்கோவிலில் கார்த்திகை 1-ம் தேதியை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் காணப்பட்டது.
திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் இன்று அதிகாலை முதல், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். ஐயப்ப குரு சாமிகள், அவர்களுக்கு மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தனர். அதே போல், அவிநாசி மங்கலம் ரோட்டில், பைபாஸ் அருகில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலிலும், ஏராளமான பக்தர்கள் இன்று காலை சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் துவக்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu