மழைக்காலத்தில் களை மேலாண்மை குறித்து வேளாண் அதிகாரி விளக்கம்
பைல் படம்.
விவசாய நிலங்களில், மழைக்காலத்தில் களை மேலாண்மை செய்வது குறித்து, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மழைக்காலத்தில், மழைநீரில் உள்ள அமிலத்தன்மையாலும், இயற்கையாக கிடைக்கும் சத்துக்களின் தன்மையாலும், நிலங்களில் களைகள் புத்துயிர் பெற்று, அதிகமாக வளரும். அவற்றை அகற்ற, 'பவர் வீடர்' என்ற இயந்திரம் மூலம், தரையின் மேற்பரப்பில் இருந்து, 10 செ.மீ., ஆழத்திற்கு, மண்ணை கிளறிவிட்டு களைச் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில், 9 கொத்து கலப்பை மூலம், 10 சென்டி மீட்டர் ஆழத்திற்கு மண்ணை கிளறி விட்டு களைச்செடிகளை எடுக்கலாம்.
உயரமான களைச்செடிகளை ஆட்களைக் கொண்டு, வேருடன் பிடுங்கி எடுக்கலாம். 'ரோட்டவேட்டர்' மற்றும் களைக்கொத்து பயன்படுத்துவது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அவற்றை பயன்படுத்துவதன் மூலம், களைச்செடிகளின் பெருக்கம் அதிகரிக்கும்.
முடிந்தவரை, ஊடு பயிர்களாக உயரம் குறைந்த, மழைக்காலத்திற்கு ஏற்ற உளுந்து, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, மொச்சை, கொள்ளு, எள்ளு, நரிப்பயிறு, சணப்பு, தக்கைப்பூண்டு, அவுரி, கொழிஞ்சி போன்ற பயிர்களில், ஏதாவது ஒன்றை நெருக்கமாக நடவு செய்யலாம். இதன் மூலம், களைச்செடிகள் கட்டுக்குள் வரும்.
இத்தகைய நடைமுறையை பின்பற்ற வாய்ப்பில்லாத விவசாயிகள், அந்நிலத்திற்கு, கூடுதல் அளவில் இயற்கை இடுபொருட்களை செலுத்துவதன் மூலம், பயிருக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தை முழுமையாக பெற முடியும். களைச்செடி பெருக்கத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு, வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu