வீணாகிய நிலம், விளை நிலமானது
ஆய்வு பணியில் ஈடுபட்ட அவிநாசி வேளாண்மை உதவி இயக்குனர்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நில மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அரசின் மானியமாக, 2.50 ஏக்கருக்கு, 13 ஆயிரத்து 475 ரூபாய் வழங்கப்படுகிறது. அதிகபட்சம், 5 ஏக்கர் வரை பயன் பெற முடியும்.
அதன்படி, அவிநாசி வட்டம், செம்பியநல்லுார் கிராமத்தில் வசிக்கும் ரங்கசாமி என்பவர், பயனற்று கிடந்த தனது நிலத்தை விளை நிலமாக மாற்ற முயற்சி மேற்கொண்டார். பயனற்று கிடந்த நிலம், டிராக்டர், ரோட்டோவேட்டர் மூலம் நிலத்தில் இருந்த முட்புதர், செடி, கொடிகள், களை அகற்றப்பட்டு, நிலம் உழவு செய்யப்பட்டது. அங்கு விதைக்க, வேளாண் துறையினர் மூலம் சோளம் விதை, நுண்ணுாட்ட உரம் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு வழிகாட்டிய, அவிநாசி வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு, உதவி வேளாண் அலுவலர் வினோத்குமார் ஆகியோர், அந்நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டனர். அவர்கள் கூறியதாவது;
விவசாய நிலம் வைத்துள்ள பலர் அதை பராமரிக்க முடியாமல், பயனற்ற நிலையில் வைத்துள்ளனர். அந்நிலங்களை தரிசு நிலமாக மாற்ற, தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் மூலம் உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம், நகரமயமாதல், விவசாய தொழிலை விட்டு வெளியேறுதல் உள்ளிட்டவை தவிர்க்கப்படும். பயனற்ற நிலங்களில் கூட வருமானம் பெற முடியும். பயனற்ற நிலத்தில் சோளம் பயிரிடுவதன் மூலம், அந்நிலம் பிற பயிர்ளை விளைவிக்க தயாராகிவிடும். இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu