வானதி, எப்படி வெற்றி பெற்றார்? நாம் தமிழர் சீமான் விளக்கம்
அவினாசியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விவசாயிகளிடம் பேசினார்.
''வட மாநில தொழிலாளர்களின் வாக்குகளால் தான், கோவையில் பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கோவை மாவட்டம், அன்னுாரில், 3,000 ஏக்கர் நிலம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, அங்கு தொழிற் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்துக்கு வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, அன்னுார் தொழிற்பூங்கா எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சந்தித்து, 'தொழிற்பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட அரசை நிர்பந்திக்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சீமான் கூறியதாவது;
வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற பெயரில், அரசு, மக்களை ஏமாற்றுகிறது. போனஸ், மானியம், இலவசம் இவை தான் அரசாங்கத்தின் திட்டங்களான உள்ளன. இவற்றால் எந்த உயர்வும், மக்களுக்கு வந்துவிட போவதில்லை. அப்படியே வேலை வாய்ப்புகளை உருவாக்கினாலும், வட இந்தியர்கள் தான், அதிகளவு வேலை வாய்ப்புகளை பெறுவர்; அவர்கள், அனைவரும் பாஜ., ஆதரவாளர்கள்; காங்கிரஸ் கட்சிக்கு கூட அவர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள். நமது கட்சியை பற்றி அவர்களுக்கு தெரியவே தெரியாது. வரக்கூடிய நாட்களில், அவர்கள் தான் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
கோவையில், பா.ஜ., வேட்பாளர் வானதிசீனிவாசன், 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்; அந்த, 20 ஆயிரம் ஓட்டு வட மாநில தொழிலாளர்கள் மூலம் கிடைத்தது என, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, நாம், நமது நிலத்தை இழந்தால் பலத்தை இழந்து விடுவோம். தொலை நோக்கு பார்வையுடன் சிந்திக்க வேண்டும். விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். அன்னுாரில், தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் வரை, போராட்டம் தொடரும்.
இவ்வாறு, சீமான் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, கட்சியின் மாவட்ட தலைவர் கவுரிசங்கர், மாவட்ட செயலாளர் சிவகுமார், பொருளாளர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu