அவினாசி அருகே மர்ம விலங்கு தாக்கி இருவர் காயம்- சிறுத்தை நடமாட்டமா?

அவினாசி அருகே மர்ம விலங்கு தாக்கி இருவர் காயம்-  சிறுத்தை நடமாட்டமா?
X

சிறுத்தையை கண்காணிக்க கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்.

அவினாசி அருகே, சோளம் தோட்டத்தில் பதுங்கியிருந்த மர்ம விலங்கு தாக்கியதில், இருவர் காயமடைந்தனர். சிறுத்தை நடமாட்டமா என்று வனத்துறை விசாரிக்கிறது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், சேவூர் அருகேயுள்ள பாப்பாங்குளம் ஊராட்சியில், ஊரடி தோட்டம் என்ற இடத்தில் வசிப்பவர் வரதராஜன், 60. இவர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை, 6:30 மணிக்கு, அவரது தோட்டத்தில் விளைந்திருந்த சோளப்பயிரை அறுப்பதற்காக, மாறன், 66 என்பவர் சென்றார். அவர் சோளத்தட்டை அறுத்துக் கொண்டிருந்த போது, தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை, அவரது முகத்தை தாக்கியது; இதில், உதடு, தாடை பகுதியில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதை அறிந்திராத வரதராஜன், 6:50 மணிக்கு தோட்டத்துக்குள் சென்ற போது அவரையும் சிறுத்தை தாக்கியது. இதில், அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும், 108 ஆம்புலன்ஸ் மூலம், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்கு பின் அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, கேமரா பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், மக்களை தாக்கிய சிறுத்தையா, காட்டுப்பூனையா என, வனத்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!