அவிநாசியில் திருமண மண்டபங்கள் முன் போக்குவரத்து இடையூறு; பொதுமக்கள் அவதி
Tirupur News- வாகனங்களால், பிரதான ரோடுகளில் ஏற்படும் இடையூறால் மக்கள் அவதிப்படுகின்றனர். (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் திருமண மண்டபங்கள் முன் போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவிநாசி, நாயக்கன் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பி.கே.தியாகராஜன், பேரூராட்சி நிா்வாகம், காவல் துறை, வருவாய்த் துறையினா் உள்ளிட்டோருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது,
அவிநாசி பேரூராட்சி கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் திருமண விஷேச காலங்களில் கூடும் ஆயிரக்கணக்கானோா் திருமண மண்டபங்களின் முன் சாலையில் ஏராளமான காா், இருசக்கர வாகனங்களை நிறுத்திவைக்கின்றனா்.
இதனால் போக்குவரத்துக்கு அதிக நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு உரிய தீா்வு காண வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. திருமண மண்டபங்களுக்கு வரும் அனைத்து வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடத்தை தோ்வு செய்ய வேண்டும். திருமண மண்டபங்களின் முன் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டப உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும் அதனை கடைப்பிடிக்காததால், தொடா்ந்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த திருமண மண்டபங்களில் விஷேச நாள்களில் ஆங்காங்கே தூக்கி எறியப்படும் எச்சில் இலைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. ஆகவே, அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.
அவிநாசி மட்டுமின்றி, திருப்பூரில் பிரதான ரோடுகளில் உள்ள மண்டபங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ள பகுதிகளிலும் இதுபோன்ற வாகன இடையூறு பாதிப்புகள் நீடிக்கவே செய்கின்றன. எனவே, திருப்பூரிலும் இதுகுறித்து போலீசார் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக முக்கியம் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu