கடைக்காரர்களே உஷார்! விதிமீறினால் இனி ரூ.5,000 அபராதம் விதிக்க முடிவு
திருப்பூர் மாவட்டம், அவினாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், அவிநாசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி, சுகாதார ஆய்வாளர்கள் பரமன், ரமேஷ் மற்றும் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள புகையிலை தடுப்பு பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோர், அவிநாசி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
சில கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்படி, கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரம் வைக்க கூடாது; சில கடைகளில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரத்தையும், அலுவலர்கள் அப்புறப்படுத்தி, அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். பஸ் ஸ்டாண்டில், கடைகளுக்கு முன் நின்று, பீடி, சிகரட் பிடித்துக் கொண்டிருந்த பயணிகளுக்கும், அபராதம் விதித்தனர். 'பொது இடங்களில் புகைப்பிடிக்க கூடாது' என்ற அறிவுறுத்தலையும் வழங்கினர்.
கடைக்காரர்களிடம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி கூறுகையில், ''தடை செய்யப்பட்ட, சுகாதாரத்துறையின் விதிமீறி செயல்படும் கடைக்காரர்களுக்கு முதன்முறை என்பதால், 100, 500 ரூபாய் அபராதம் விதிக்கிறோம். மீணடும், மீண்டும் அத்தகைய செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால், அதிகபட்சம், 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.
சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார் கடைக்காரர்களிம் கூறுகையில்,'பீடி, சிகரட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பிடிப்பதால், புற்றுநோய் உள்ளிட்ட பெரும் தீங்கு விளைவிக்கும் என்பதைஅறிந்தே விற்பனை செய்யலாமா, உங்கள் வீடுகளில் உள்ள பிள்ளைகள், பீடி, சிகரட் பிடித்தால் ஏற்றுக்கொள்வீர்களா, அதுவும், பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் உள்ள இடம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவே கூடாது. எனவே, மனிதாபமானத்துடன், அத்தகைய பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்,'' என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu