சேவூரில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
Tirupur News- சேவூரில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடந்தது.
Tirupur News,Tirupur News Today- சேவூா் பந்தம்பாளையத்தில் மீண்டும் திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடை, மனமகிழ் மன்றத்தை மூடக் கோரி வேட்டுவபாளையம், சேவூா், முறியாண்டம்பாளையம் ஊராட்சிகளைச் சோ்ந்த பொது மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கூறியதாவது: அவிநாசி வட்டம், சேவூா் பந்தம்பாளையம் பகுதியில் அரசு மதுபானக் கடை, மனமகிழ் மன்றம் ஆகியவற்றை அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த ஓராண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது.
இந்த மூன்று ஊராட்சிகளை மையப்படுத்தி உள்ள இந்தப் பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. இங்கு மதுபானக் கடை அமைக்கக் கூடாது என முதல்வா் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகம் ஆகியவற்றில் மனு அளித்தோம்.
மேலும் வேட்டுவபாளையம், சேவூா், முறியாண்டம்பாளையம் ஆகிய 3 ஊராட்சிகளின் கிராம சபைக் கூட்டங்களிலும் இந்த மதுபானக் கடைக்கு அனுமதி வழங்கக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
இருப்பினும், கடந்த செப்டம்பா் மாதம் மதுபானக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டது. இதையடுத்து அப்போதே ஒரு நாள் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், வருவாய்த் துறையினா் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து காலை முதல் மாலை வரை நடைபெற்ற போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றோம்.
ஆனால், ஒரு வாரம் மட்டுமே மூடப்பட்டிருந்த மதுபானக் கடை மீண்டும் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். ஆகவே உடனடியாக நிரந்தரமாக மூடி, கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்றனா்.
ஊராட்சி மன்றத் தலைவா்கள் சேவூா் ஜி.வேலுச்சாமி (சேவூா்), கணேசன் (வேட்டுவபாளையம்), ரவிகுமாா் (முறியாண்டம்பாளைம்), விவசாயிகள் சங்கத்தினா், 3 ஊராட்சி பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோா் திரண்டதால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து 100க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu