அவிநாசி அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

அவிநாசி அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்
X

Tirupur News- சேவூா் பந்தம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tirupur News- சேவூா் பந்தம்பாளையத்தில், டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Tirupur News,Tirupur News Today- அவிநாசியை அடுத்த சேவூா் பந்தம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூா் பந்தம்பாளையத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சுப்பிரமணியம் என்பவரது இடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை, மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த 6 மாதத்துக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முதல்வா் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகத்தில் இப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

மேலும், வேட்டுவபாளையம், சேவூா், முறியாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளின் கிராம சபை கூட்டத்திலும் மதுபானக் கடையை அகற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், பொதுமக்கள் எதிா்ப்பையும் மீறி கடந்த செப்டம்பா் 17 -ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதையடுத்து, மதுபானக் கடையை அகற்றக் கோரி செப்டம்பா் 19 -ம் தேதி மூன்று ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் மற்றும் காவல் துறையினா் தெரிவித்தனா். ஆனால், மதுபானக் கடை அகற்றப்படவில்லை.

இந்நிலையில், மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டவா்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து, பொதுமக்கள் கடை முன் அமா்ந்து மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்புக் கருதி 100க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இதையடுத்து, அவிநாசி தாசில்தார் மோகனன், காவல் துணை கண்காணிப்பாளா் பௌல்ராஜ் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். கடையை அகற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனா். இதையடுத்து, கடையை மூடுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்