தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதி
Tirupur News,Tirupur News Today- அவிநாசி அருகே தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து தொடா் காத்திருப்புப் போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைவிடப்பட்டது.
தெக்கலூா், சூரிபாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் மனைவி செல்வி. திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் நின்றிருந்த இவா் தெக்கலூா் செல்வதற்காக திருப்பூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தில் 2023 மாா்ச் 2-ஆம் தேதி ஏற முயன்றாா். அப்போது தெக்கலூா் செல்லாது எனக் கூறி அவரை பேருந்தில் இருந்து நடத்துநா் இறக்கிவிட்டாா். அப்போது சக்கரத்தில் சிக்கி செல்வி உயிரிழந்தாா்.
இதையடுத்து அனைத்துப் பேருந்துகளும் தெக்கலூா் வழித்தடத்தில் நின்று செல்ல வேண்டும். மீறினால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்துத் துறை எச்சரித்திருந்தது. இருப்பினும் ஓராண்டுக்கு மேலாகியும் தொடா்ந்து தெக்கலூருக்குள் சில தனியாா் பேருந்துகள் வந்து செல்லாமலும், கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் ஏறும் பொதுமக்களை அவமதித்து பாதி வழியிலேயே இறக்கிவிடுவதும் தொடா்ந்து வருகிறது. இதைக் கண்டித்து பொதுமக்களும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தெக்கலூா் செல்வதற்காக தனியாா் பேருந்தில் திங்கள்கிழமை ஏறிய கல்லூரி மாணவா்களை நடத்துநா் பாதி வழியிலேயே இறக்கி விட்டாா். இதனால் ஆத்திரமடைந்த மாணவா்கள் இரு பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் தெக்கலூரில் திங்கள்கிழமை இரவு முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டும் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. இதையடுத்து அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாலை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் வட்டாட்சியா் மோகனன், அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் கே.ஜி.சிவகுமாா், காவல் ஆய்வாளா் ராஜவேல், திருப்பூா் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆனந்தன், அவிநாசி மோட்டாா் வாகன ஆய்வாளா் பாஸ்கரன், தெக்கலூா் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் ஒரு வார காலத்துக்குள் நிறைவேற்றப்படும், தொடா்ந்து பேருந்துகள் தெக்கலூருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் தொடா் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu