அவினாசி தேவாலயம் சார்பில் தவக்கால ஆன்மிக யாத்திரை
கிறிஸ்தவர்கள், தற்போது தவக்காலம் அனுசரித்து வருகின்றனர். தினமும் விரதம் இருப்பது, தேவாலயங்களில் நடக்கும் சிலுவைப்பாதை ஆராதனையில் பங்கேற்பது போன்ற பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவிநாசி புனித தோமையார் தேவாலயத்தில், தவக்கால பக்தி முயற்சியாக, வழக்கமான வழிபாடுகளுடன், சிறுவர், சிறுமியர், இளைஞர், இளம் பெண்கள் மற்றும் தம்பதியனருக்கான நல் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலான, சிறப்பு தியான வகுப்புகள் நடத்தப்பட்டன. கடந்த வாரம், தேவாலயத்தில் இருந்து சிலுவை புரம் வரை, பாத யாத்திரை நடத்தப்பட்டது.
நேற்று, பக்தர்கள் ஆன்மிக வாகன யாத்திரை அழைத்து செல்லப்பட்டனர். அவிநாசியில் துவங்கி சேவூர் லுார்துபுரம் புனித லுார்து அன்னை தேவாலயம், புளியம்பட்டி, வாலிபாளையம், பவானிசாகர், கொத்தமங்கலம், வடவள்ளி, சத்தி, பெரிய கொடிவேரி, அக்கரை கொடிவேரி, கரட்டடிபாளையம், கோபி, கொளப்பலுார், மரியபுரம் என, 14 இடங்களில் உள்ள தேவாலயங்களுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
ஏசுவின் சிலுவைப்பாடுகள் என்பது, 14 ஸ்தலங்களை உள்ளடக்கிய நிலையில், ஒவ்வொரு தேவாலயத்திலும், ஒவ்வொரு ஸ்தலங்கள் தியானிக்கப்பட்டன. ஐந்து பஸ்களில், 250க்கும் மேற்பட்டவர்கள், அவரவர் சொந்த வாகனங்களில், 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, தேவாலய பங்கு குரு ஏ.டி.எஸ். கென்னடி மற்றும் பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu