சத்துணவில் புழு: அதிகாரிகள் ஆய்வு!

சத்துணவில் புழு: அதிகாரிகள் ஆய்வு!
X
குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவில் புழு இருப்பது தொடர்பான புகாரை, கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

அவினாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவில் புழு இருப்பது தொடர்பான புகாரை, கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். திருப்பூர் மாவட்டம், அவினாசி, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. 348 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவில், புழு இருப்பதாக பெற்றோர் புகார் கூறியிருந்தனர்.

இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி, வட்டார கல்வி அலுவலர் சுமதி, அவிநாசி பி.டி.ஓ., மனோகரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர், நேற்று பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். புழு இருப்பதாக கூறப்பட்ட சத்துணவு உண்ட மாணவி, அவரது பெற்றோர் ஆகியோரிடம், அதிகாரிகள் விளக்கம் பெற்றனர். சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சிலரும் இருந்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், ''சத்துணவில் புழு இருப்பாக கூறிய புகார் தொடர்பாக, விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அறிக்கை, மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்கப்படும். வரும் நாட்களில் இதுபோன்று புகார் எழாத வகையில், கவனமுடன் சத்துணவு சமைக்க வேண்டும் என, சத்துணவு செய்யும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.

பணிச்சுமை காரணமா?

அவினாசி நகரின் பிரதான இடத்தில் உள்ள இப்பள்ளியில், கடந்தாண்டுகளில் மாணவர் எண்ணிக்கை 'கிடுகிடு'வென உயர்ந்தது. தற்போது, 348 பேர் உள்ளனர்; 200 பேர் சத்துணவு உண்கின்றனர். ஆனால், ஒரு சமையலர், சத்துணவு அமைப்பாளர் பணியிடம் மட்டுமே இருப்பதால், ஒருவரே அத்தனை பேருக்கும் மதிய உணவு தயாரித்து, சரியான நேரத்திற்குள் வழங்குவது என்பது, கடினமான பணியாக உள்ளது. இதனால், சில நேரங்களில் கவனக்குறைவால் இத்தகைய பிரச்னை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில், கூடுதல் பணியாளர்களை நியமிக்கும்பட்சத்தில், இதுபோன்ற புகார் எழுவதை தவிர்க்க முடியும் என, பெற்றோர் சிலர் கூறினர்.

Tags

Next Story
what can we expect from ai in the future