நோட்டமிடும் கண்கள் அவினாசியில் அதிகரிப்பு- வங்கிக்கு செல்வோரே உஷார்

நோட்டமிடும் கண்கள் அவினாசியில் அதிகரிப்பு-  வங்கிக்கு செல்வோரே உஷார்
X
வங்கியில் இருந்து பணம் எடுத்து செல்லும் மக்களை பின்தொடர்ந்து, பணத்தை திருடி செல்லும் கும்பல், அவினாசி உள்பட மாவட்டம் முழுக்க சுற்றித்திரிவதாக, காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

வங்கியில் இருந்து பணம் எடுத்து செல்லும் மக்களை பின்தொடர்ந்து, அவர்களின் கவனத்தை திசை திருப்பி, நொடிப்பொழுதில் பணத்தை திருடி செல்லும் கும்பல், திருப்பூர் மாவட்டம் முழுக்க சுற்றத்திரிவதாக, காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, வஞ்சிப்பாளையத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் வசந்தகுமார். கடந்த மாதத்தில் ஒருநாள், தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள இரண்டு ஏ.டி.எம்.,களில் இருந்து, 1.81 லட்சம் ரூபாயை எடுத்தார். ஒரு பையில் வைத்து, தனது ஸ்கூட்டியின் இருக்கைக்கு அடியில் வைத்து விடுகிறார்.

இயல்பாய் இருக்காதீங்க...

பிறகு, அங்குள்ள ஒரு ஒர்க்‌ஷாப் முன், வண்டியை நிறுத்தி விட்டு, ஸ்கூட்டரில் இருந்து சாவியை எடுக்காமலேயே, சென்று திரும்புகிறார். இது இயல்பாக பலரும் செய்யக்கூடிய விஷயம்தான். ஒர்க்‌ஷாப் சென்று, சில நிமிடங்களில் திரும்பி வந்து, தன் ஸ்கூட்டியை பர்த்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.


ஆம்! அவரது ஸ்கூட்டியில் இருந்த சாவியை எடுத்து, யாரோ பணத்தை களவாடி சென்றிருப்பதை அறிந்தார். அதிர்ச்சியடைந்த வசந்தகுமார், அவினாசி காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்க, அங்கிருந்த சிசிடிவி., கேமராவில் பதிவாகியிருந்த காட்சியின் அடிப்படையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐதராபாத்தை சேர்ந்த விக்ரம், விஷ்ணு என்ற இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

எப்படி நடக்குது திருட்டு: திடுக் தகவல்

ஐதராபாத் நகரின் அருகேயுள்ள, குறிப்பிட்ட சில கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு, திருட்டுதான் பிரதான தொழில். அந்த இளைஞர்கள் தாங்களாக இயங்குவதில்லை; ஒரு கும்பல் அவர்களை இயக்குகிறது. அந்த இளைஞர்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பி வைத்து, பணத்தை திருட திட்டம் வகுத்து கொடுப்பர்.

காலை முதல், மாலை வரை குறிப்பிட்ட பகுதியில் சுற்றித்திரியும் அந்த இளைஞர்கள், வங்கிக்கு உள்ளும், வெளியும் நின்று நோட்டம் விடுவர். வங்கி மற்றும் ஏ.டி.எம்.,ல் இருந்து பணம் எடுக்கும் பலர், தங்களது டூவீலரில் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அத்தகைய நபர்களை பின்தொடரும் அந்த இளைஞர்கள், அவர்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவர்.

அவர்களது முகம், முதுகில் ஏதேனும் ரசாயனம் தெளிப்பது, அவர்களது எதிரில் சென்று, 'உங்கள் பணம் கீழே விழுந்து விட்டது' எனக் கூறி திசை திருப்பி, அவர்களது பணத்தை களவாடி செல்வர்.

தொடர்பு எல்லைக்கு வெளியே...

இந்த தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மொபைல்போன் உள்ளிட்ட எந்தவொரு தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் இல்லை. மாறாக, மாலை, 6:00 மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் சங்கமிப்பர்; அவர்களை இயக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து, அன்றைய தினம் அவர்கள் திருடிய தொகையை வாங்கிச் செல்வர். பணம் திருடிய இளைஞர்களுக்கு, ஊதியமாக ஒரு தொகையை வழங்கி விடுவர். ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது, 4 முதல், 6 பேர் இத்ததைய திருட்டு தொழிலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு, காவல் துறையினர் கூறினர்.

உஷாரய்யா உஷாரு!

எனவே, திருப்பூர் மாவட்ட மக்களே, வங்கிக்கு பணம் எடுக்கவோ, செலுத்தவோ செல்லும் போது கவனமாக இருங்கள். உங்களது முழு கவனத்தையும் பணத்தின் மீது வைக்க வேண்டும். உங்களை யாரேனும் பின் தொடர்கின்றனரா அல்லது கண்காணிக்கின்றனரா என்பதையும் நீங்கள் நோட்டமிட வேண்டும். உங்களை கவனத்தை திசை திருப்பும் வகையில் பேசினால், மிகவும் கவனமுடன் கையாள வேண்டும் எனவும் காவல் துறையினர் அறிவுரை கூறுகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!