காட்சிப்பொருளாக உள்ள விக்ரகங்கள்: பொன் மாணிக்கவேல் வேதனை
உலக சிவனடியார்கள் அறக்கட்டளையின் மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைவழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பங்கேற்றார். வழங்கும் நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே பழங்கரையில், உலக சிவனடியார்கள் அறக்கட்டளையின் மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற, உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாநில தலைமை ஆலோசகரும், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் பேசியதாவது;
இறைவனிடத்தில் இருந்து விபூதியை வாங்குவது மட்டுமின்றி, மனதார சமய தலைவர்களை மதிக்க வேண்டும். 60 வயதை கடந்த பிறகு வரும் ஒவ்வொரு நாளும் இறைவன் கொடுத்த வரம்; அதை இறைவனுக்கே அர்பணிக்க வேண்டும். இறைவனின் திருமேனிகளை, சிலைகள் என சொல்லக்கூடாது; விக்ரகம் என சொல்ல வேண்டும். கோவில் அலுவலர்கள், கால பூஜைகளிலெல்லாம் தலையிடக் கூடாது; கோவில்களை, முறைகேடு இல்லாமல் நிர்வாகித்துக் கொண்டால் போதுமானது. சென்னை அருங்காட்சியகம், கருவூலம், விக்ரக பாதுகாப்பகம் உள்ளிட்ட இடங்களில் சிறைபட்டிருக்கும் சுவாமி விக்ரகங்களை கோவில்களில் வைத்து வழிபட வேண்டும்.
கோவில்களில் உள்ள தெய்வ திருமேனி மற்றும் விக்ரங்களை நன்கு பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அடியார்களுக்கு உண்டு; விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ், பண்பாடு கலாசாரத்தை அடுத்த தலைமுறையினருக்கென பாதுகாக்க வேண்டும். குழந்தைகளுக்கு சூட்டுப்படும் பெயர்கள் முதற்கொண்டு, கலாசாரம், பாரம்பரியத்தை எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். அனைத்து அடியார்களும், உலக சிவனடியார்கள் கொடைக்குள் ஒருங்கிணைவது பாதுகாப்பானது. இவ்வாறு, அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu