அவிநாசியில் ஆகாசராயா் கோவிலுக்கு மண் குதிரைகளை சுமந்து வந்த பக்தர்கள்
Tirupur News- ஆகாசராயர் கோவிலுக்கு கொளுத்தும் வெயிலில் மண் குதிரைகளை சுமந்து வந்த பக்தர்கள்.
Tirupur News,Tirupur News Today- அவிநாசி ராயம்பாளையம் பகுதி மக்கள் ஆகாசராயா் கோவிலுக்கு மண் குதிரைகளை சுமந்து வந்து செவ்வாய்க்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், சுந்தரமூா்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு, அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் இருந்து 2 மண் குதிரைகளை மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து சப்பரத்தில் கட்டி அப்பகுதி இளைஞா்கள் தோளில் சுமந்தபடி நடுவச்சேரி சாலை, மடத்துப்பாளையம் சாலை, சேவூா் சாலை, கச்சேரி வீதி, வடக்கு, கிழக்கு ரத வீதி, கோவை பிரதான சாலை, மங்கலம் சாலை வழியாக ஆகாசராயா் கோவிலை வந்தடைந்தனா்.
முன்னதாக பேரூராட்சி அலுவலகம் முன் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, துணைத் தலைவா் மோகன் தலைமையில் நீா் மோா், குளிா்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதேபோல வழி நெடுகிலும் பொதுமக்கள், பக்தா்களுக்கு குடிநீா், பழரசம், நீா் மோா், மாலைகள் உள்ளிட்டவை வழங்கி வரவேற்றனா். பிறகு ஆகாசராயா் கோவிலில் குதிரைகளை வரிசையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, ஆகாசராயா் மற்றும் காத்தவராயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் நோ்த்திக் கடனாக கோவில் வளாகத்துக்கு வெளியே காத்தவராயருக்கு கிடாய் வெட்டி வழிபட்டனா். இதில் ராயம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
இது ஆண்டுதோறும் வழக்கமாக நடந்துவரும் முக்கிய வழிபாடாக இருந்து வருகிறது. இந்த நாளில் கோடை வெயிலை பொருட்படுத்தாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆகாசராயரை வழிபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu