அவிநாசியில் சாலையோர வியாபாரிகளுக்கு தனி விற்பனை மண்டலம் அமைத்து தர கலெக்டர் அறிவுறுத்தல்
Tirupur News- அவிநாசியில் சாலையோர வியாபாரிகளுக்கு தனி விற்பனை மண்டலம் அமைக்க கலெக்டர் அறிவுறுத்தல் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today-- அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரையிலும், சேவூர் ரோட்டில், சிந்தாமணி பஸ் ஸ்டாப், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 300 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்களால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக நிரந்தர கடை உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகம், போலீசாருக்கு மனு அளித்திருந்தனர்.
இதனால் கடந்த வாரத்தில் நிரந்தரக்கடை உரிமையாளர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள், ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தினர் ஆகியோரை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஞாயிறன்று மூடப்பட்டுள்ள கடைகள் முன் அரசு அலுவலகங்கள் முன் மற்றும் வாரச்சந்தை ஆகிய இடங்களில் கடைகளை அமைத்து கொள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர். மனுவை விசாரித்த கலெக்டர் கிறிஸ்துராஜ், சாலையோர வியாபாரிகளுக்கு தனி விற்பனை மண்டலம் அமைத்து கொடுக்கவும், சிறு,குறு கடன் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்குமாறும் அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி (பொறுப்பு) கூறுகையில், அவிநாசியில் சாலையோர கடைகளை முறைப்படுத்துவதற்கான வழிவகை செய்து தருமாறு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
திருப்பூரிலும் இதே நிலை தான்; கலெக்டர் கவனிப்பாரா?
திருப்பூரிலும் மெயின் ரோடுகளிலும், முக்கிய வீதிகளிலும் ரோட்டோரங்களை ஆக்கிரமித்து அதிகளவில் கடைகள் காணப்படுகின்றன. இது பண்டிகை காலங்களில் மட்டுமின்றி நிரந்தரமாக இந்த கடைகள் செயல்படுகின்றன. குறிப்பாக பல்லவம் ரோட்டில் மேம்பாலம் பகுதியில் இருந்து தென்னம்பாளையம் சிக்னல் வரை ரோட்டோரங்களை ஆக்கிரமித்து இருபுறமும் நாள் முழுவதும் ரோட்டோர கடைகள் செயல்படுகின்றன.
வேன்கள், மினி சரக்கு லாரிகளை நடுரோட்டில் நிறுத்தி விடுகின்றனர். பிரதான ரோட்டில் வாகன நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி, விபத்துகள் ஏற்படும் ஆபத்தும் அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த பகுதி ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அடுத்த பத்து நாட்களில் மீண்டும் அதே இடங்களில் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. இதனால் பழையபடி போக்குவரத்து பாதிப்பு, வாகன நெரிசல் இடையூறு இந்த பகுதியில் தொடர்கிறது. எனவே, இப்பகுதியில் உள்ள ரோட்டோர ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu