பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மைய ஒப்பந்தம் திடீர் ரத்து
பிஎஸ்என்எல் ஊழியர்கள்.
தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தனது வாடிக்கையாளர் சேவை பிரிவை, கார்வி டிஜிகனெக்ட் என்ற தனியார் நிறுவனம் வசம் ஒப்படைத்துள்ளது. கடந்த, 2019ல், திருப்பூர் மாவட்டம், அவிநாசி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், இரு மாநிலங்களுக்கான வாடிக்கையாளர் சேவை மையம், தனியார் நிறுவனம் சார்பில் திறக்கப்பட்டது.
தமிழக வாடிக்கையாளர் சேவை பிரிவில், 51 பேர், கேரள பிரிவில், 69 பேர் பணியமர்த்தப்பட்டு, அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். மாதம், 9,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களின் தொலை தொடர்பு சேவை சார்ந்த அழைப்புகளுக்கு, தொலைபேசி வழியாக விளக்கம் அளிக்கும் பணியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊழியர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில்,'கடந்த பிப்., மாதம் வழங்கப்பட வேண்டி சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. கேரளா, நீலகிரி என, தொலை துாரங்களில் உள்ளவர்களும், இங்கு அறை எடுத்து தங்கி, பணிபுரிந்து வருகிறோம். எங்கள் பணிக்கு, உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். அவர்களது ஸ்டிரைக்கால், வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூடப்பட்டன.
வாடிக்கையாளர் சேவை மையத்தின் நிர்வாக மேலாளர் ஜிஜோ சாஜி, மேலாளர் அஜித்குமார் ஆகியோர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர் சேவை மையம் நடத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் போட்டிருந்தது. ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தற்போது ரத்து செய்துவிட்டது. இருப்பினும், வரும் ஜூலை வரை பணியை தொடரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு வேறு நிறுவனத்திற்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஒப்பந்தத்தை வழங்க உள்ளதாக தெரிகிறது.
ஒப்பந்தத்தின் போது, பிணைய வைப்பு தொகையாக, ஆக்சிஸ் வங்கியில், எங்கள் நிறுவனம் சார்பில், 5.50 கோடி ரூபாய் வைக்கப்பட்டிருந்தது. எங்கள் ஒப்பந்தம் பாதியில் ரத்து செய்யப்பட்டதால், அந்த தொகையை, வங்கியினர் முடக்கி வைத்துள்ளனர். இதுபோன்ற சிக்கலால் தான், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கால தாமதம் ஏற்பட்டுள்ளது. வரும், 28ம் தேதி சம்பளம் வழங்கப்பட்டு விடும் என, நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu