முண்டாசுக்கவிஞனை போற்றிய அவினாசி அரசு கல்லூரி தமிழ்த்துறை மாணவர்கள்

முண்டாசுக்கவிஞனை போற்றிய அவினாசி அரசு கல்லூரி தமிழ்த்துறை மாணவர்கள்
X

அவிநாசி கலை அறிவியல் கல்லூரியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவில் கல்லூரி முதல்வர் ஜோ.நளதம் பேசினார்.

அவினாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில், பாரதியார் பிறந்தநாள் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

பாரதி…முண்டாசுக்கவிஞன். மறைந்து நுாறாண்டு காலம் ஆகிவிட்டது. ஆனாலும், இன்னும் வாழ்கிறார்; ஆம். மகாகவி பாரதியின் பாடல்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன; மெய் சிலிர்க்க வைக்கின்றன. தான் வாழ்ந்த காலத்திலேயே, அடுத்த பல தலைமுறைக்கான அறிவுரையை சொல்லி சென்ற தீர்க்கதரிசி பாரதியார்.

அவரது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், திருப்பூர் மாவட்டம், அவினாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில், ஒரு விழா எடுத்தார்கள். மெய் சிலிர்க்க வைத்தது, அந்த 'பாரதி(க்கு) விழா'. அரசு கல்லூரியில் இப்படி ஒரு அசத்தல் விழாவா என்று மெய்சிலிக்க வைத்தது; அத்துடன், இவ்விழா, பிற கல்லூரிகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருந்தது.

பணிவு வேண்டும்

அவினாசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பாரதி விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் முனைவர் ஜோ. நளதம் தலைமை வகித்தார். அவரது எழுச்சி உரை, மாணவர்களுக்கு அற(றி)வுரையாக இருந்தது.

அவர் பேசும் போது, ''பாரதியின், பாடல் வரிகளுக்கேற்ப மாணவர்கள் வாழ வேண்டும். நேர்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும். பல மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு, மரியாதை செலுத்தாமல் கண்டும், காணாதது போல் செல்லும் நிலையை பார்க்க முடிகிறது; தங்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்தலும் சரி; பயிற்றுவிக்காத ஆசிரியராக இருந்தாலும், அவர்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டும். இந்த பணிவு, உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்" என்று குறிப்பிட்டார்.

துணிவும் வேண்டும்

விழாவை ஏற்பாடு செய்த, கல்லுாரியின் தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன் பேசும்போது, "தமிழின் அடையாளமாக பாரதி விளங்குகிறார். அச்சமில்லை, அச்சமில்லை என முழங்கிய பாரதியின் நேர்மை, துணிவை மாணவர்கள் பெற வேண்டும்," என்று உரக்க முழங்கினார்.

பின்னர், அவரது ஆக்கம் மற்றும் தோற்றத்தில் உருவான காணெளியை, சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற, கோவை, ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் துறையின் ஊடகத்தொடர்பியல் துறை பேராசிரியர் சுப்ரமணியன் நடேசன் வெளியிட, கனவு இலக்கிய வட்டத் தலைவரான, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பெற்று கொண்டார்.

புரட்சிக்கு வித்திட்டவர்

இவ்விழாவில் முத்தாய்ப்பாக, பாரதியாரின், 5வது தலைமுறை எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி இணைய வழியில் இணைந்து கொண்டார்.

நிரஞ்சன் பாரதி தனது உரையில், "கடைக்கோடி மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாரதியார், தன் பாடல், கவிதைகளை எழுதினார். அவர் எழுதிய பாடல் வரிகளுக்கு ஏற்ப, அவர் வாழ்ந்தும் காட்டினார். புரட்சி என்ற வார்த்தைக்கு வித்திட்டவர் கூட பாரதிதான்,'' என்றார்.

தொடர்ந்து, ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் துறை ஊடகத் தொடர்பியல் துறை மாணவர்கள், பாரதியார் பாடல்களை இசையுடன் கூடிப்பாடி மகிழ்வித்தனர்.

'பாரதி' ஆக தோன்றிய மாணவர்கள்

தமிழ்த்துறை மாணவர் ரஞ்சித்குமார், ஆங்கிலத்துறை மாணவி ரம்யாவும் பாரதியார் பாடல்களை இனிமையாக பாடினர். ஏற்கனவே நடத்தப்பட்ட, பாரதி குறித்த கலை இலக்கிய போட்டிகளில் பங்கெடுத்த, 100 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் பாரதி வடிவில் நின்று காட்சியளித்தனர். முன்னதாக, தமிழ்த்துறை மாணவர் சஞ்சய் குமார் வரவேற்றார். முடிவில், மாணவி சுதந்திரப்பிரியா நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!