‘அரோகரா’ கோஷம் முழங்க அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
Tirupur News- பக்தர் வெள்ளத்தில் பவனி வந்த தேர் (உள்படம்) சொர்ண அலங்காரத்தில் சோமாஸ்கந்தர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று ‘அரோகரா’ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூா்த்தி நாயனாா், தேவார திருப்பதிகம் பாடி உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும், தமிழகத்தில் 3-ஆவது பெரிய தோ் கொண்ட தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது.
இக்கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான 3 நாள்கள் நடைபெறும் அவிநாசியப்பா் தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக தொடங்கியது.
தேரை வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியை அவிநாசி வாகீசா் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், பேரூா் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி சரவண ராஜா மாணிக்க சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் குமரதுரை, கோயில் செயல் அலுவலா் சீனிவாசன், அறங்காவலா் குழுத் தலைவா் ஆ.சக்திவேல், அறங்காவலா்கள் க. பொன்னுச்சாமி, ம. ஆறுமுகம், பொ.விஜயகுமாா், கு.கவிதாமணி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்று, ‘அரோகரா’ கோஷம் முழங்க, திருப்பூா் சிவனடியாா்கள் கைலாய வாத்தியத்துடன் தோ் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். திருத்தேரில் சோமாஸ்கந்தா் சொா்ண அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தெற்கு ரதவீதி கோவை பிரதான சாலையில் தொடங்கிய அவிநாசியப்பா் தேரோட்டம், மேற்கு ரத வீதி வழியாக வந்து, வடக்கு ரத வீதி வளைவில் மதியம் 1 மணிக்கு நிறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பல்வேறு அமைப்பினா் சாா்பில் பக்தா்களுக்கு நீா், மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.
இன்று திங்கள்கிழமை (ஏப்ரல் 22) காலை 9 மணிக்கு வடக்கு ரத வீதியில் இருந்து அவிநாசியப்பா் தேரோட்டம், நிலை சேருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், கரிவரதராஜ பெருமாள் தேரோட்டம், தோ் நிலை சேருதல் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
25-ஆம் தேதி இரவு தெப்பத் தோ் உற்சவ நிகழ்ச்சியும், 26-ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனமும், 27-ஆம் தேதி மஞ்சள் நீா், இரவு மயில் வாகனக் காட்சியுடன் விழா நிறைவடைகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu