கருவலூர் ஊராட்சியில் இறைச்சிக்கடை நடத்தும் விவகாரம்: ஏல முறை ரத்து
கருவலூர்
திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கருவலுார் ஊராட்சியில், ஆறு கோழிக்கடைகள் உட்பட, ஆடு, மீன் என, 21 இறைச்சிக்கடைகள் உள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பில் இவை ஆண்டுக்கொரு முறை ஏலம் விடப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு, நான்கு முறை ஏலம் விட்டும், இறைச்சிக் கடைகள் ஏலம் போகவில்லை.
இந்நிலையில், தொழில் உரிம கட்டணம் செலுத்தி, யார் வேண்டுமானாலும் இறைச்சிக்கடைகளை நடத்திக் கொள்ளும் வகையிலான தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மேட்டுப்பாளையம் சாலையோரம், ஊராட்சி எல்லையில் உள்ள பகுதியில் கோழிக்கடை வைக்க, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், ஆட்டுக்கறி வைக்க, 10 ஆயிரம், மீன் கடை வைக்க, 50 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, தெற்கு வீதி அண்ணா நகர் பகுதியில், கோழிக்கறிகடை வைக்க, 50 ஆயிரம், ஆட்டுக்கறி கடை வைக்க, 7,000, மீன் கடை வைக்க, 30 ஆயிரம் என, அந்தந்த பகுதி சார்ந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்களது சொந்த இடத்தில் கடை வைக்க விரும்புவோர், இந்த உரிம கட்டணம் செலுத்தி, கடை வைத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி தலைவர் முருகன் கூறுகையில்,''ஊராட்சி சார்பில் இறைச்சிக்கடைகள் கட்டி ஏலம் விட, புறம்போக்கு நிலம் இல்லை. ஊராட்சியில் உள்ள புறம்போக்கு நிலம் குறித்த விவரம் அளிக்கும்படி, தாசில்தாருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஊராட்சிக்கென தனியாக இடம் கிடைக்கும் வரை, தற்காலிகமாக, ஊராட்சியின் வருவாய் ஆதாரத்தை கணக்கில் கொண்டு, தொழில் உரிம கட்டணம் செலுத்தி, கடைகளை நடத்திக் கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது; பி.டிஓ., அனுமதி கிடைத்ததும், அமல்படுத்தப்படும்,'' என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu