ரங்காநகரில் 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிக்க முயற்சி?
அவினாசி அருகே, 'ரிசர்வ் சைட்'டில் இருந்த விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடந்ததாக எழுந்த புகார், பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சி ரங்காநகரில் உள்ள 'ரிசர்வ் சைட்', அம்மா விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. விளையாட்டு திடல்களும் இருந்தன. அந்த இடத்தையொட்டி உள்ள தனியாருக்கு சொந்தமான இடம், புதிதாக வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.
அந்த 'ரிசர்வ் சைட்'டில் இருந்த விளையாட்டு மைதானத்தை, அந்த 'ரியல் எஸ்டேட்' நில உரிமையாளர், 'பொக்லைன்' மூலம் சமன்படுத்தி, மைதானம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உருமாற்றினார்.
புதிதாக வீட்டுமனை உருவாக்குபவர்கள், தங்களது நிலத்தில் ஒரு பகுதியை 'ரிசர்வ் சைட்' என, ஊராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும். ஆனால், புதிதாக வீட்டுமனை அமைத்தவர்கள், ஏற்கனவே, ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 'ரிசர்வ் சைட்'டை கணக்கு காண்பிக்கும் நோக்கில் தான், அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்துள்ளனர் என, அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.
பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன் இப்பிரச்னையில் தலையிட்டு, ஊராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டை ஏற்கனவே உள்ளது போன்று, விளையாட்டு மைதானமாக மாற்றித்தருமாறு கூறினார். அதனை ஏற்று கொண்டு, பழையபடி விளையாட்டு மைதானமாக மாற்றித்தருவதாக, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் உறுதியளித்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu