அவிநாசியில், அதிக நிறமி சேர்க்கப்பட்ட கோழி இறைச்சி பறிமுதல்

அவிநாசியில், அதிக நிறமி சேர்க்கப்பட்ட கோழி இறைச்சி பறிமுதல்
X

அசைவ உணவகங்களில், கோழி இறைச்சியை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள்.

அவிநாசியில் அசைவ உணவகங்களில், அதிக நிறமிகள் சேர்க்கப்பட்ட 22 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு, அவிநாசி தாலுாகா பைபாஸ் ரோடு மற்றும் மங்கலம் ரோட்டில் உள்ள அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தியது. அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்களில் சேமித்து வைக்கப்படும் குளிர்சாதன பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, சமைத்த அசைவ உணவு குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படுகிறதா?, காலாவதியான உணவு பொருட்கள் கொண்டு சமைக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில், அவிநாசி பகுதியில் எட்டு அசைவ உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஒன்பது பேக்கரி கடைகளிலும் ஆய்வு நடந்தது. குளிர்சாதன பெட்டியில் சமைத்த அசைவ உணவு ஒன்பது கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சமைத்த சுண்டல் மற்றும் சன்னா மசாலா மூன்று கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அதிக நிறமிகள் சேர்த்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த கோழி இறைச்சி 22 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

மேலும் பரோட்டா மற்றும் சப்பாத்தி தயாரிப்பதற்கு உரிய முறையில் பராமரிக்கப்படாத மாவு நான்கு கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. காலாவதியான காளான் பாக்கெட்டுகள் 2 கிலோவும், பழைய காகிதத்தில் வைத்திருந்த வடை, பஜ்ஜி, போண்டா 4 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மொத்தம் இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம்.

மேலும் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பொட்டலம் செய்து கொடுத்ததற்காக கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம், 4 கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அசைவ உணவகங்கள், பேக்கரி உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள். உணவு சார்ந்த கலப்படம், தரம் குறைவு போன்ற புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்