அவினாசி கல்லுாரி உதவி பேராசிரியருக்கு இந்திய சாதனை விருது
அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முனைவர் தமிழ்த்துறைத் தலைவராகவும், உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருபவர் முனைவர் மணிவண்ணன். வயது 51. இவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம். ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்தவர். 12 ஆண்டுகளாக தமிழ் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
படைப்பாளி:
இவர் எழுத்தாளராகவும், ஆவணம் மற்றும் குறும்படம் இயக்குவதிலும் கைத்தேர்ந்தவராக உள்ளார். சூழலியல் மற்றும் குழந்தைகளை மையமாக கொண்டு, இதுவரை, 10 படைப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும், கவிதை,மொழி பெயர்ப்பு, சிறுகதை, நாவல், திறனாய்வு முதலான தளங்களில் இதுவரை, 12 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய 'பெய்த நூல்' என்ற கவிதைத் தொகுப்பு. கேரள அரசின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நூல்களில், சில மலையாளத்தில் மொழிபெயர்ப்பு கண்டுள்ளன. தமிழுக்கும் மலையாளத்திற்கும் இலக்கிய பாலமாக இருந்ததற்காக, கேரள கலாச்சார அமைப்பின் 'சாகித்ய புரஸ்கார்' விருதையும் இவர் வென்றுள்ளார்.
இந்திய சாதனை:
இவர், 2021ம் ஆண்டின் இறுதியில் எழுதிய 'வெண் தரிசு நிலம்' என்ற நாவல், 2022ம் ஆண்டிற்கான 'இண்டியா புக் ஆஃப் ரெக்கார்ட்' விருதை வென்றுள்ளது. இந்த நாவல், இரு வேறு மொழிகளை சேர்ந்த இரண்டு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட முதல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் தமிழகம் கேரளா ஆகிய இரண்டு நிலப்பிரதேசங்களில் நடக்கும் கதைக்களமாகும்.
12 பாகங்களைக் கொண்ட இந்த நாவலின் முதல், 7 பாகங்களை போ.மணிவண்ணன் எழுதியுள்ளார். இது, தமிழகம் சார்ந்து நகர்கிறது. மீதமுள்ள, 5 பாகங்களை கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த பெண் எழுத்தாளர் அஞ்சு ஸஜித் எழுதியுள்ளார். இது, கேரளத்தில் நகர்கிறது. இந்நூல் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒரே சமயத்தில் வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்தே இந்நூலை இரு மொழிகளிலும் மொழி பெயர்த்திருக்கின்றனர்.
நாவல் என்ன சொல்கிறது?
முனைவர் போ.மணிவண்ணன் கூறியதாவது;
கொரோனா ஊரடங்கு காலத்தில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை. இணைய வழியாகவே இணைந்து, இந்த நாவலை உருவாக்கினோம். வறுமையில் உழன்று, உறவினைப் பிரிந்து எல்லைகளைக் கடந்து தனிமையின் துயரங்களில் புலம்பெயர்ந்து வாழும் குடியானவர்களின் வலிகளும், வேளாண் மரபின் வேர்கள் அறுபடாமல் இருக்க முதல் தலைமுறை பட்டதாரிகள் எடுக்கும் வியர்வைப் போராட்டங்களையும் இந்நாவல் விவரிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார். எங்கள் கல்லூரி முதல்வர் நளதம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu