சேவூா் வாலீஸ்வரா் கோவிலில் வரும் 27ல் ஆருத்ரா தரிசன விழா
Tirupur News- வரும் புதன்கிழமை ஆருத்ரா தரிசன விழா, சிவாலயங்களில் நடக்கிறது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள சேவூா் வாலீஸ்வரா் கோவிலில் வரும் 27-ம் தேதி, புதன்கிழமை ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.
ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்று கூறுவது விந்தையான விஷயம்தான். மார்கழி திருவாதிரையில் நடராஜரின் தாண்டவத்தை தரிசித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
தேவர்களின் விடிகாலை பொழுதாக போற்றப்படும் மார்கழியில் திருவாதிரைப் பண்டிகை ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவனுக்கு உகந்த நாள். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்
பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன. சேந்தனார் வீட்டுக்கு களி சாப்பிட நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.
ஒவ்வொரு தமிழ் மாதமும் திருவாதிரை நட்சத்திர தினம் என்பது சிவ வழிபாட்டுக்கு உகந்தது. அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரத நாள். இந்த நாளில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். இந்நாளில் நாம் காணும் நடராஜரின் அற்புதமான நடனத் திருக்காட்சியே ஆருத்ரா தரிசனம் என்று போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை மையமாகக் கொண்டு பெண்கள் சிலர் திருவாதிரை விரதம் எடுத்து தங்கள் தாலியினை மாற்றிக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வர்.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். வேறு எந்த கோவில்களிலும் இத்தகைய சிறப்பை காண இயலாது என்பதால் இந்த விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்திற்கு வருவார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் விழா நடக்கிறது.
கொங்கு ஏழு ஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றப்படுவதுமான சேவூா் அறம் வளா்த்த நாயகி உடனமா் வாலீஸ்வரா் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான விழாவையொட்டி சேவூா் வாலீஸ்வரா் கோயிலில் திருவாதிரை நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் டிசம்பா் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து, திருவாதிரை நாச்சியாா் திருவீதி உலா நடைபெறவுள்ளது. இதையடுத்து, இரவு 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான சிவகாமியம்பாள் உடனமா் நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம், புஷ்ப அலங்காரம் மகா தீபாராதனை ஆகியவை டிசம்பா் 27-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதையடுத்து, மதியம் 3 மணியளவில் புஷ்ப அலங்காரத்தில் அரச மரத்தடி விநாயகா் கோயிலில் பட்டி சுற்றுதல் நிகழ்ச்சியும், திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூட்டத்தாரின் கையால வாத்தியத்துடன் ஊடல் திருவிழாவும் நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, காலை 9 மணி முதல் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu