கோவில் பாதுகாப்புக்கு முதியவர்கள் நியமனம்; மாஜி ஐ.ஜி பொன்மாணிக்கவேல் வேதனை
Tirupur News,Tirupur News Today- முன்னாள் போலீஸ் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டம், அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் சமீபத்தில் திருட்டுச் சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி.யும், உலக சிவனடியாா்கள் திருக்கூட்டத்தின் மாநில தலைமை ஆலோசகருமான பொன்மாணிக்கவேல், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலை நேரில் வந்து பாா்வையிட்டாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது,
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்த அவிநாசி போலீசாருக்கு பாராட்டுகள். இச்சம்பவம் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா், ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்திருக்க வேண்டும். அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலாரம், சிசிடிவி கேமரா ஆகியவை செயல்படவில்லை. இதை கவனிக்காமல் இருந்த கோயில் இணை ஆணையா், செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும், இருவருக்கும் குறைந்தபட்சம் 6 மாதம் வரை 50 சதவீத சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும். இச்சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளி உண்மையில் மனநோயாளியா என்பதை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கோயில்களின் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் ரூ.44 கோடி செலவு செய்யப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு பணிக்கு உடல் தகுதியில்லாத முதியவா்கள் நியமிக்கப்படுகின்றனா். இவா்கள் தூங்கிவிட்டு சம்பளம் வாங்கிச் செல்கின்றனா். அதேநேரம் கோயில் அா்ச்சகா்கள் மற்றும் மங்கள வாத்தியக்காரா்களுக்கு முறையாக சம்பளமும் வழங்கப்படுவதில்லை. எந்தெந்த கோயிலில் அா்ச்சகா்கள் உள்ளிட்டவா்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளதோ, அந்தக் கோயிலில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.
மேலும், தமிழகத்தில் எந்தவொரு கோயிலிலும் குற்றச் சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu