திருப்பூர் வடக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் தானியங்கி சோதனை நிலையம்; அதிகாரிகள் தகவல்
Tirupur News- திருப்பூர் வடக்கு ஆர்டிஓ அலுவலகம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் உள்ள வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மூலம், வாகனங்களுக்கு தகுதிச்சான்று (எப்.சி.,) வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, தானியங்கி சோதனை நிலையம் மூலம் தகுதிச்சான்று வழங்கும் திட்டம், மத்திய மோட்டார் வாகன சட்ட அறிவுறுத்தலின் படி கொண்டு வரப்பட உள்ளது.
இதற்காக தமிழகத்தில் 48 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 18 அலுவலகங்களில் 2024 ஜனவரி முதல் தானியங்கி சோதனை மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை போக்குவரத்து துறை தொடங்கி உள்ளது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் கூறுகையில்,
முழுத்தகுதி பெற்ற வாகனங்கள் சாலையில் இயங்குவதை உறுதி செய்வதுடன், இடைத்தரகர்கள் தலையீட்டை முழுவதும் தடுக்க வேண்டும் என்பதற்காக தானியங்கி சோதனை மையம் உருவாக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் ஆட்டோ, கார், பைக், பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கு தனித்தனி பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாகனங்களின் பிரேக் அமைப்பு, முகப்பு விளக்கு, பேட்டரி, சக்கரம், பிரதிபலிப்பு ஸ்டிக்கர் மற்றும் வேகம் காட்டும் கருவி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்கு பின் ஆய்வாளர் ஒப்புதலுடன் சான்றிதழ் வழங்கப்படும், என்றனர்.
தாம்பரம், ஸ்ரீ பெரும்புதுார், செங்குன்றம், வேலூர், திண்டிவனம், சேலம் மேற்கு, ஸ்ரீ ரங்கம், தஞ்சாவூர், திருப்பூர் வடக்கு, கோவை வடக்கு, ஈரோடு கிழக்கு, நாமக்கல் வடக்கு, திண்டுக்கல், மதுரை தெற்கு, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 18 ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தானியங்கி சோதனை அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரை பொருத்த வரை, மிக மிக அதிகளவில் வாகனங்கள் இயக்கப்படும் முக்கிய தொழில் நகரமாக உள்ளது. குறிப்பாக வாகனங்கள் பயன்பாடும் தேவையும் அதிகமாக உள்ள நகரமாக இருப்பதால், இந்த சேவை பலவிதங்களில் பொதுமக்களுக்கு பயனளிப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu